தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

அறிமுகம்

பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக முகலாயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். ஆளும் வர்க்கங்களான இறையாண்மையுள்ள அரசுகள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் முஸ்லிம்களாக இருந்ததால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சில சலுகைகளை ஆளும் வர்க்கத்தினரிடமிருந்துப் பெற்றனர். அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் பாரசீகமொழி இருந்தது. ஆங்கிலேயர் படிப்படியாக அவற்றை மாற்றி ஒரு புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலக் கல்வி முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. 1857ஆம் ஆண்டுப் பெரும்புரட்சியே ஆளும் வர்க்கத்தினரின் இறுதி வாய்ப்பாக அமைந்தது. புரட்சியின் கடுமையான அடக்குமுறைகளைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் தங்களது நிலம், வேலை உள்ளிட்ட வேறு பல வாய்ப்புகளையும் இழந்ததோடு வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டனர். இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டது. மேலும் 1857ஆம் ஆண்டு பெரும்புரட்சிக்குப்பின் வாழ்ந்த முதல் தலைமுறையினர் சிலர் ஆங்கிலேயரின் அனைத்து நடவடிக்கைகளையும் வெறுத்தனர். மேலும் அவர்கள் ஆங்கிலேய காலனியக் கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட இந்தியர்களோடு போட்டியிட நேர்ந்ததால் சீற்றம் கொண்டனர். கல்வி கற்ற மேல்வகுப்பு இந்துக்கள் தேசிய உணர்வு பெற்று எழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர்கள் நடுத்தர வர்க்க முஸ்லிம்களை காங்கிரஸின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ஒரு சக்தியாகப் பயன்படுத்தினர். அவர்கள் இத்தகைய சூழலைப் புத்திசாலித்தனமாக தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டனர். இப்பாடத்தில் நாம் மூன்று வகையான தேசியத்தின் போக்குகளை பற்றி அறிய உள்ளோம் அவையாவன: இந்திய தேசியம், இந்து தேசியம் மற்றும் முஸ்லிம் தேசியம் என்பவனவாகும்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

அ) இந்துமத மறுமலர்ச்சி

ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்பினர். சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத் தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது. இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்ட அன்னிபெசண்ட் அம்மையார் தனது கருத்துகளைப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி ஆகும். இது கடந்த காலப் பெருமையுடன், ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேச/நாட்டுப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும், நாட்டைப் புனரமைப்பதற்கானத் தொடக்கமாகவும் உருவாக்கப்பட வேண்டும்

ஆ) முஸ்லிம் உணர்வின் எழுச்சி

சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல, மறுபுறம் இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்த சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம் தேசியக் கட்சி தோன்றவும், முஸ்லிம் அரசியல் கருத்தியல் தோன்றவும் உதவியது. வாஹாபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும், அதன் உயிரை உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில மூடப்பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்பினர். வாஹாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப் பங்காற்றியது.

வேறுபலகாரணங்களாலும் முஸ்லிம் உணர்வு மேலோங்கத் தொடங்கியது. 1870களில் வங்காள அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியதும், பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்குப் பதில் நாகரி எழுத்து வடிவத்தைக் கொண்டு வந்தது, முஸ்லிம் தொழில்வல்லுநர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இ) பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை

கூட்டு இந்திய அடையாளம் ஒன்று உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது. பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டோன், பழைய

ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும் என்று எழுதினார்தினார். வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கம், வகுப்புவாதக் கருத்தியல் சார்ந்த அரசியலுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.

ஈ) காங்கிரஸ் நடவடிக்கைகள்

ஆரிய சமாஜம் போன்ற இந்து அமைப்புகளில் நிறைய காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்ட போதிலும், காங்கிரஸ் தலைமை சமயச்சார்பற்றதாகவே இருந்தது. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதையைக் குற்றமென அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சில காங்கிரஸ்காரர்கள் முயற்சி செய்த போதிலும், காங்கிரஸ் தலைமை அத்தீர்மானத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை அல்லது இனத்தைப் பாதிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும் போது, அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தால், எதிர்க்கும் உறுப்பினர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருந்தது.

உ) சையது அகமது கானின் பங்கு

அலிகார் இயக்கத்தின் நிறுவனரான சர் சையது காங்கிரசின் ஆதரவாளராக இருந்தார். பின்னர், அவர் சிந்தனை வேறுவிதமாக மாறத் தொடங்கியது. இந்துக்களால் ஆளப்படும் நாட்டில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது என்று எண்ணினார். ஆனால், முஸ்லிம் தலைவர்களான பத்ருதீன் தியாப்ஜி, பம்பாயைச் சார்ந்த ரஹமதுல்லா சயானி, சென்னையைச் சேர்ந்த நவாப் சையது முகமது பகதூர், வங்காளத்தைச் சேர்ந்த ஏரசூல் ஆகியோர் காங்கிரசை ஆதரித்தனர். ஆனால், வடஇந்தியாவில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் சையது அகமதுகானின் வழியைப் பின்பற்றி பிரிட்டிஷாரை ஆதரிக்கத் தொடங்கினர். பிரதிநிதித்துவ அமைப்புகளின் அறிமுகம், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் போன்றவை முஸ்லிம்களின் பயத்தை அதிகரிக்கத் தொடங்கியதால் சையது அகமது கானும், அவரைப் பின்பற்றியவர்களும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படத் தொடங்கினர். அரசாங்கத்தோடு இணக்கமாக செயல்படுவதன் மூலம் தனது இனத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பெரும்பங்கினை பெற்றுத்தர இயலும் என்றும், அப்படியில்லாத பட்சத்தில் தம் இனத்தவர்கள் சிறுபான்மையினர் என்பதால் எண்ணிக்கை அல்லது தகுதி அடிப்படையில் வழங்கப்படும் குறைவான அரசு வெகுமதியே கிடைக்கும் என்று எண்ணினார்.

இந்து-முஸ்லிம் விரிசலைக் குறைத்து அனைத்து வகுப்பினரின் உண்மையான குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்லும் முயற்சியாகவே 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது. ஆனால், சர் சையது அகமது கான் இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ், இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று வாதிட்டனர். காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும், முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசில் முஸ்லிம்கள் பங்கேற்றால் அது ஆட்சியாளர்களிடையே அவர்கள் இனத்திற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் காங்கிரசை முழுமையாக எதிர்த்தனர்.

ஊ) உள்ளாட்சி தேர்தல்களில் வகுப்புவாதம்

வகுப்புவாத உணர்வுகள் வளர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட எதிர்பாராத விளைவுகளை, மக்களாட்சி அரசியலில் சந்திக்க நேர்ந்தது. 1880களில் உள்ளாட்சி அமைப்புகள் வகுப்புவாத அரசியல் வளர்வதற்கு உதவின. நகராட்சி உறுப்பினர்கள் அதிக அதிகாரங்களைப் பெற்று தங்கள் அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொண்டார்கள். முஸ்லிம்கள் தலைமையேற்ற நகராட்சி வாரியங்களை இந்துக்களும், இந்துக்கள் தலைமையேற்ற நகராட்சி வாரியங்களை முஸ்லிம்களும் வலிந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

பஞ்சாப் இந்து சபையின் முதன்மைத் தகவல் தொடர்பாளராகவும், பின்னர் ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவருமாக இருந்த லால் சந்த் சில நகராட்சிகள் வகுப்புவாத அடிப்படையில் அமைக்கப்பட்டதை விளக்கியுள்ளார். நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவரது நாற்காலியின் வலது மற்றும் இடது புறங்களில் இரு வரிசைகளாக அமர்ந்திருந்தனர். வலதுபுற வரிசையில் ஆரியவர்கத்தைச் சார்ந்த பழைய ரிஷிகளின் வம்சாவளியினரும், இடதுபுற வரிசையில் இஸ்லாமின் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர். இவ்வாறு அமர்ந்திருந்ததன் மூலம் அவர்கள் நகராட்சியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி முகமதியர்களாகவும், இந்துக்களாகவும் இருப்பதையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர்.

எ) காங்கிரசின் பலவீன கொள்கை

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தில் சுதேசி இயக்கம் (1905-06) தொடங்கப்பட்டபோது, அதை ஆதரித்த முஸ்லிம்கள் காங்கிரஸின் தரகர்கள் என்ற கண்டனத்திற்கு உள்ளாயினர். காங்கிரஸ் இத்தகைய வாதங்களை மறுத்து தக்க எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காத்ததால், வகுப்புவாத அரசியல் சக்திகள் மேலும் தூண்டப்பட்டன. அதே நேரத்தில், தேசியவாத முஸ்லிம்கள் தங்கள் ஊக்கத்தையும், நம்பிக்கையும் இழந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பதிற்றாண்டில் அரசியல் தீவிரவாதம் சமய பழமைவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டபோது மோசமான நிலைக்கு மாறத்தொடங்கியது. திலகர், அரவிந்த கோஷ் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோர் சமய அடையாளங்கள், திருவிழாக்கள் ஆகிய தளங்களை பயன்படுத்தி காலனித்துவ எதிர்ப்பு உணர்வை ஊட்டினர். கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு திலகர் மேற்கொண்ட முயற்சி மேலும் தீவிரப்படுத்திய மற்றொரு காரணியாகும். முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கையை, இந்திய தேசிய காங்கிரஸ் பின்பற்றியதற்கு லால் சந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

“இந்து-முஸ்லிம் வகுப்புவாதம், நடுத்தர வகுப்புகளுக்கிடையே நடந்த மோதல்களின் விளைவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்புவாதத்திலிருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்.” – ஜவஹர்லால் நேரு

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்

1906 அக்டோபர் 1இல் முஸ்லிம் பிரபுக்கள், ஆளும் வர்க்கத்தினர், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் உயர்பிரிவினர் பெரும்பாலும் அலிகார் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் ஆகிய 35 பங்கேற்பாளர்கள் ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப்பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர்நீதி மன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரச பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த சிம்லா மாநாடு அரசப்பிரதிநிதியிடமிருந்து எந்த ஒரு நல்ல தீர்மானத்தையும் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லையென்றாலும், இது அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாவதற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது எனலாம். முஸ்லிம்களின் நோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பினை 1907ஆம் ஆண்டில் வழங்கியது. இவ்வியக்கத்தில் பெரும் ஜமீன்தார்களும், முன்னாள் நவாப்புகளும் மற்றும் முன்னாள் அதிகாரத்துவவாதிகள் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றினர். இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை, முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை மற்றும் அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை நல்கியது.

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள்

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கானது, முதல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக மையப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இருந்தது. அதன் நோக்கங்கள் பின்வருமாறு :

  • இந்திய முஸ்லிம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல், மேலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு எழும் தவறான கருத்துக்களை நீக்குதல்.
  • இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மேலும் தங்களது தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்குத் தெரிவித்தல்.
  • இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்

தொடக்கத்தில் நகர்ப்புற மேல்தட்டு மக்களுக்கான ஒரு அமைப்பாகவே அனைத்து இந்திய முஸ்லிம் லீக் இருந்தது. இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்பைப் பெற்று இந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட பிரதிநிதித்துவ உறுப்பாக இது மாறியது. உருவாக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி பெறுவதை வெற்றிகரமாக சாதித்தது எனலாம். இது முஸ்லிம்களுக்கு அரசமைப்பு சார்ந்த அடையாளத்தை வழங்கியது . லக்னோ ஒப்பந்தம் (1916), முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.

தனித் தொகுதி அல்லது வகுப்புவாரித் தொகுதி: இந்த வகையான முறையில் முஸ்லிம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். 1909 ஆம் ஆண்டு மிண்டோ -மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது. மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பின்வருமாறு ஒதுக்கியிருந்தது. அவையாவன: மதராஸ் 4; பம்பாய் 4; வங்காளம் 5.

தனித்தொகுதியும் வகுப்புவாதப் பரவலும்

பிரிட்டிஷ் இந்திய அரசு, வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கும் பரப்புவதற்கும் தனித்தொகுதி என்னும் முதன்மையான ஒரு நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது.

பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் லேடி மிண்டோ அவர்களுக்கு அனுப்பிய குறிப்பின் வாயிலாக பிரிட்டிஷார் உள்நோக்கத்துடனேயே இத்தகைய செயலைச் செய்ததை அறியமுடிகிறது. இன்று மிகப்பெரிய செயல் நடைபெற்றது என்பதை தங்களின் மேலான பார்வைக்கு நான் அனுப்புகிறேன். இத்தகைய ராஜதந்திர நடவடிக்கை இந்திய வரலாற்றில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது 62 மில்லியன் மக்கள் தூண்டிவிடப்பட்ட எதிர் முகாமில் சேர்ந்துவிடாமல் இழுத்துப்பிடிக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை”

தனித்தொகுதி அறிவிப்பு மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடு அரசமைப்பு சட்டத்தில் முறையாக நுழைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை முழுமையாக அந்நியப்படுத்தியது.

அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி

அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டதையும், 1909ஆம் ஆண்டு இந்தியக் கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அம்பாலாவில் நடைபெற்ற ஐந்தாவது பஞ்சாப் இந்து மாநாட்டிலும், பெரோஷ்பூரில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக 1915இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ஹரித்துவாரில் கூட்டப்பெற்றது. அங்குதான் டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய இந்து மகாசபை தொடங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மாகாண இந்து சபைகள் அலகாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய மாகாணத்திலும் பம்பாயிலும், பீகாரிலும் தொடங்கப்பெற்றன. பம்பாயிலும், பீகாரிலும் இவ்வமைப்புகள் திறம்பட செயல்படவில்லை. சென்னையிலும் வங்காளத்திலும் ஓரளவிலான ஆதரவேயிருந்தது.

நகர்ப்புற இயல்பினை அதிகம் கொண்டிருந்த இம்மகாசபை வட இந்தியாவின் பெரும் வணிக நகரங்களில், குறிப்பாக அலகாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ , லாகூர் போன்ற நகரங்களில் வீரியத்துடன் செயல்பட்டது. ஐக்கிய மாகாணத்திலும் பீகாரிலும் பெரும்பாலும் படித்த இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த தலைவர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் காங்கிரசிலும் திறம்படச் செயல்பட்டனர். வகுப்புவாதிகளின் பிரிவினைவாத அரசியலைக் கிலாபத் இயக்கம் ஓரளவுக்கு ஒத்தி போட்டது. இதன்விளைவாக 1920-1922 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்து மகாசபை செயல்படவில்லை.

அரசியலில் உலோமாக்கள் நுழைந்ததானது இந்துக்களிடையே ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட, புத்துயிர் பெற்ற இஸ்லாமைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது. அலி சகோதரர்களைப் போன்ற முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கூட எப்போதும் கிலாபத் இயக்கத்தவர்களாகவே இருந்தனர். அடுத்தபடியாகத்தான் அவர்கள் காங்கிரஸ்காரர்களாய் இருந்தனர். கிலாபத் இயக்கத்தின் போது மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் பணியில் முஸ்லிம்கள் காட்டிய திறன், இந்துக்களை ஒன்று திரட்ட அதே பாணியைப் பின்பற்ற இந்து வகுப்பு வாதிகளைத் தூண்டியது. சுத்தி இயக்கம் ஒரு புதிய நிகழ்வாக இல்லாவிட்டாலும் கிலாபத் இயக்கத்திற்கும் பின்வந்த காலங்களில் அது புதிய முக்கியத்துவத்தைப் பெற்றது. 1921இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்க மக்களைத் திரட்டுகையில், சுவாமி சிரத்தானந்தா பசுப்பாதுகாப்பைப் பரப்புரை செய்வதன் மூலம் இந்து மகாசபைக்கு புத்துயிர் அளிக்க முனைந்தார்.

முதல் உலகப்போருக்கு முன்னர் கலீஃபா, காபா (இஸ்லாமியச் சமயத்தின் புனிதமான இடம்) ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாப்பதாக இங்கிலாந்து வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால் முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்விக்குப் பின்னர் அவ்வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்துவிட்டது. திகைத்துப்போன முஸ்லிம் சமூகத்தினர் ஆங்கிலேயருக்குத் தங்கள் கோபத்தைக் காட்டவும், துருக்கியின் கலீஃபாவை பாதுகாக்கவும், கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.

1921இல் நடைபெற்ற குருதி ட் கொட்டிய மலபார் கிளர்ச்சியின் போது அங்கு முஸ்லிம் விவசாயிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்து நிலப்பிரபுக்களுக்கு GHTNEET எதிராகவும் களமிறங்கியது இந்து மகா சபை தன்னுடையப் பிரச்சாரத்தை புதுப்பிக்க காரணமாயிற்று. அடிப்படையில் அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின. இதன் விளைவாக காந்தியடிகளே இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார். மலபாரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென காந்தியடிகள் கோரிக்கை விடுத்தார்.

அ) ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம்

1922இல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதும், 1924இல் கலீஃபா பதவி ஒழிக்கப்பட்டதும் முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும் கிலாபத்துக்கும் இடையேயான உறவு சிதைந்தது. 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயாட்சி நிறுவனங்களில் தங்கள் அரசியல் கோரிக்கைகளுக்காக இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டியிட்டனர் அதிகாரத்திற்கும் பதவிகளுக்குமான இப்போட்டியின் விளைவாக புதிதாக வகுப்பவாத வன்முறைகள் பெருகின. ஆகஸ்ட் 1923இல் வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். ஐக்கியமாகாணம், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை 86.8 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன. சென்னை பம்பாய், வங்காளம் ஆகிய மூன்றும் 6.6 விழுக்காடு பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தன. 1920கள் காங்கிரசிற்கு சோதனைகள் மிகுந்த காலமாகும். இம்முறை ஐக்கிய மாகாணத்தில் ஏற்பட்ட வகுப்புவாதப் பதட்டத்திற்கு இந்து முஸ்லிம் தலைவர்களின் மத ஈடுபாடு மட்டும் காரணமல்ல. சுயராஜ்யவாதிகளுக்கும் தாராளவாதிகளுக்குமான (Liberal Party) அரசியல் போட்டிகளும் தூண்டுகோலாய் அமைந்தன.

அலகாபாத்தில் மோதிலால் நேருவும் மதன் மோகன் மாளவியாவும் ஒருவரையொருவர் எதிர்த்தனர். 1923இல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினர் வெற்றி பெற்றதால், மாளவியாவின் அணியினைச் சேர்ந்தோர் மத உணர்வுகளைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி குரோஸ்த்வெயிட் மாளவியாவின் குடும்பத்தார் வேண்டுமென்றே இந்துக்களைத் தூண்டிவிட்டனர். இச்செயல் முஸ்லிம்களின் மீது எதிர்வினையாற்றியது எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆ) இந்து மகாசபை

வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது. 1924இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார். அரசியல் களத்தில் இந்துமத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்துமகாசபை அகண்ட இந்துஸ்தான் என்னும் முழக்கத்தை முன் வைத்தது. இது முஸ்லிம் லீக்கின் தனித்தொகுதிக் கோரிக்கைக்கு எதிராக வைக்கப்பட்டதாகும். இந்து மகாசபை நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு முரண்பட்டதாகவே இருந்தது. ஆங்கிலேய ஆட்சியை ஆதரிக்காத இந்து மகாசபை, அதே நேரத்தில் தேசிய இயக்கத்திற்கும் தனது முழுமையான ஆதரவை நல்கவில்லை.

அந்நிய மேலாதிக்கத்திற்கு எதிராக அனைத்து வர்க்கங்களின், சமூகங்களின் ஆதரவைத் திரட்ட வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இருந்தது. ஆனால் பல்வேறு சமூகங்களின் தலைவர்களால் சமய உணர்வுமிக்கக் குழுவினரின் ஆதரவை இழக்க நேரிடும் எனும் அச்சத்தின் காரணமாக சமயச் சார்பின்மை எனும் கோட்பாட்டை வலியுறுத்த முடியவில்லை . இக்காலகட்டத்தில் காந்தியடிகளின் தலைமையில் காங்கிரஸ் பல ஒற்றுமை மாநாடுகளை நடத்திய போதிலும் அவற்றால் பயன்களேதும் ஏற்படவில்லை .

இ) முஸ்லிம்களின் டெல்லி மாநாடும் அவர்களின் புதிய கருத்துருக்களும்

1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் நிகழ்வுகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உன்னத வெளிப்பாடாய் அமைந்தது. மாநாடு முன்வைத்த நான்கு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தனித்தொகுதிக்கோரிக்கையை தாங்கள் கைவிடுவதாக முஸ்லிம்கள் அறிவித்தனர். அந்நான்கு கோரிக்கைகள் வருமாறு 1. பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது 2. பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது 3. பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் 4. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு.

டெல்லி முஸ்லிம் மாநாடு வடிவமைத்த புதிய கருத்துக்களை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால் நேருவும் எஸ். ஸ்ரீனிவாசனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர். ஆனால் வகுப்புவாத உணர்வுகள் மிகவும் ஆழமாக வேர்விட்டிருந்ததால் இம்முன் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்து முஸ்லிம் பிரச்சனை மனிதர்களின் கைகளைத் தாண்டிச் சென்றுவிட்டதாகக் காந்தி கருத்துக் கூறினார். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இச்சிக்கலைத் தீர்க்கத் தவறிய காங்கிரஸ், பிரச்சனையை நீட்டிக்கும் விதமாக இரண்டு குழுக்களை அமைத்தது. பம்பாயிலிருந்து சிந்துவை பிரிப்பது நிதியாதார அடிப்படையில் இயலும் என்பதைக் கண்டறிய ஒரு குழு, முஸ்லிம் பெரும்பான்மையைப் பாதுகாக்கும் ஒரு உத்தியாக விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மற்றொரு குழு என இரு குழுக்கள் அமைக்கப்பெற்றன. இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்டிருந்த விரிசலைச் சுருக்குவதற்கான முயற்சிகளை ஜின்னா மேற்கொண்டிருந்தார். அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பெற்றவராவார். ஆனால் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்து மகாசபையின் உறுப்பினர்கள் திருத்தங்கள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள மறுத்து, ஒற்றுமைக்கான வாய்ப்புகள் அனைத்தையும் அழித்தபோது ஜின்னா, தான் கைவிடப்பட்டதாக வேதனையுற்றார். இதன் பின்னர் பெரும்பான்மையான முஸ்லீம் தலைவர்கள் காங்கிரஸிலிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுவதைவிட ஆங்கிலேயஅரசாங்கத்தை நாடுவது சாலச் சிறந்தது என உறுதியாக நம்பினர்.

பிரிவினைவாத தேசியத்தின் வளர்ச்சி குறித்த தனது மன வேதனையை காந்தி பின்வருமாறு வெளிப்படுத்தினார்: தனிமனிதர்களின் எண்ணிக்கையைப் போலவே பல மதங்கள் உள்ளன.” ஆனால் தேசியத்தின் ஆன்மா குறித்த விழிப்புணர்வுள்ளவர்கள் மற்றவர்களின் மதங்களில் தலையிடமாட்டார்கள். இந்தியாவிலுள்ள அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டுமென இந்துக்கள் நம்பினால் அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்றே பொருள். தங்கள் நாட்டை உருவாக்கிய இந்துக்கள், சீக்கியர்கள், முகமதியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் ஆகிய அனைவரும் நாட்டின் சக மனிதர்களே. தங்களுடைய நலன்களுக்காக அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தாக வேண்டும். உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் ஒரு நாட்டுரிமையும் ஒரு மதமும் ஒரே பொருளைத் தருகிற வார்த்தைகளாக இல்லை. இந்தியாவில் அவ்வாறு எப்போதுமே இருந்ததில்லை.

ஈ) வகுப்புவாதத் தீர்வும் அதன் பின் விளைவுகளும்

பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதில் ஆங்கில அரசு உறுதியாய் இருந்தது. இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுப் பிரதிநிதிகள் வகுப்புவாத அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட மேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு வகுப்புவாதத் தீர்வை அறிவித்தார். அது அரசியல் சூழலை மேலும் சீர்குலைத்தது.

1925இல் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் விரிவடைந்து கொண்டிருந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை 1,00,000 மாக உயர்ந்த து. K.B.ஹெட்கேவர், V.D. சவார்க்கர், M.S. கோல்வாகர் ஆகியோர் இந்து ராஷ்டிரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” அவர்கள் அந்நியர்களாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினர். இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம் என V.D.சவார்க்கர் உறுதிபடக் கூறினார். 1934 முதலாகவே தனது உறுப்பினர்கள் இந்து மகாசபையிலோ ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலோ இணைவதைக் காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் டிசம்பர் 1938இல் தான் காங்கிரஸ் செயற்குழு இந்து மகாசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என அறிவித்தது.

முதல் காங்கிரஸ் அமைச்சரவை – மீட்பு நாள் – நேரடி நடவடிக்கை நாள்

முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

இந்திய தேசிய காங்கிரஸின் தேசியவாதத்தை உருவகப்படுத்திய மகாத்மா காந்தி ஆரிய சமாஜமும், அலிகார் இயக்கமும் முன்வைத்த குறுகிய தேசியவாதத்தை மறுத்தார். மேலும் பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட, அவற்றைக் கடந்த ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க அவர் விரும்பினார். பல்வேறு சாயல்களைக் கொண்ட அரசு ஆதரவு பெற்ற வகுப்புவாத சக்திகள் இருந்த போதிலும் இந்தியாவில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பெரும் செல்வாக்குப் பெற்ற சக்தியாகத் திகழ்ந்தது. 1937இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது. முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அது வெற்றி பெற்றது. காங்கிரஸ், மதச்சார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சி பெற்றது. ஆனால் அரசு அதற்கு இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது. முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதியாக முஸ்லிம் லீக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. முஸ்லிம் லீக்கை காங்கிரசிற்கு சமமான சக்தியாகவே நடத்தியது.

மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல்

1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார். காங்கிரசைக் கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டதால் காங்கிரஸ் மிகவும் ஆத்திரமடைந்தது. காங்கிரஸ் செயற்குழு மாகாணங்களைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமாச் செய்ய வேண்டுமென முடிவு செய்தது. காங்கிரஸ் அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து மாகாண ஆளுநர்கள் சட்டமன்றங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்த பின்னர் மாகாண நிர்வாகப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை மீட்பு நாளாக 1939 டிசம்பர் 22இல் முஸ்லிம் லீக் கொண்டாடியது. அன்று பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட செயல்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசியவாத முஸ்லிம்களின் செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரானதென பெயரிடப்பட்டு சிறுமைபடுத்தப்பட்டன. இவ்வாறான சூழலில் 1940 மார்ச் 26இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.

பாகிஸ்தான் என்ற எண்ணவோட்டம் 1940இல் முஸ்லிம் லீக் மேடைகளிலிருந்து வெளிப்பட்டாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிஞரும் அறிஞருமான முகமது இக்பாலால் சிந்திக்கப்பட்டதாகும். 1930இல் அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டுமாநாட்டில் இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காண விரும்புவதாகக் கூறினார். இது பின்னர் கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரகமது அலியால் வலுவாக வெளிப்படுத்தப்பட்டது. லீக்கின் அடிப்படைக் கோரிக்கையானது இரு நாடு கொள்கை ஆகும். இதனை முதலில் சர் வாசிர் ஹசன் என்பவர்தான் 1937இல் நடைபெற்ற பம்பாய் லீக் மாநாட்டில் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். இப்பரந்த கண்டத்தில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு சமூகங்கள் அல்ல, ஆனால் பல வழிகளில் இரு நாட்டினராக கருதுதல் வேண்டும் என்றார்.

முதலில் ஜின்னாவோ , நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை . இருந்தபோதிலும் 1940 மார்ச் 23இல் முஸ்லிம் லீக் பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு: “இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின், இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும். கீழ்க்கண்ட கொள்கைகளைக் கொண்டிராத எந்தவொரு அரசியல் அமைப்புத் திட்டமும் இந்நாட்டில் செயல்பட இயலாது முஸ்லிம்களுக்கு ஏற்புடையாகவும் இருக்காது. அதாவது நிலவியல் அடிப்படையில் நிர்ணயித்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகள் மண்டலங்களாக அவற்றின் எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும். தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்ட, நிலப்பகுதிகளைக் கொண்டவைகளாக அவைகள் அமைதல் வேண்டும். முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் சுதந்திரமான தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும்”. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டுமென்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.

நேரடி நடவடிக்கை நாள்

1940களின் தொடக்கத்தில் இந்து மற்றும் முஸ்லிம் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன. 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம் லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது. 1946இல் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக் மத்திய சட்டமன்றத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட 30 இடங்களிலும் வென்றதோடு, மற்ற மாகாணங்களில் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களையும் வென்றது. காங்கிரஸ் கட்சி பொது தொகுதிகள் அனைத்தையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. ஆனால் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் இந்திய மக்களின் குரலாக ஒலிக்கும் கட்சி அதுமட்டுமே என்ற கருத்தை வலியுறுத்தும் வாய்ப்பை இழந்தது.

1946இல் அரசு செயலாளரான பெதிக் லாரன்ஸ் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைத் தூதுக்குழு காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இடையிலான பிணக்கைத் தீர்த்து அதிகாரத்தை ஒரு இந்திய நிர்வாக அமைப்பிடம் மாற்றம் செய்யும் நம்பிக்கையோடு புதுடெல்லி வந்தது. மூன்று உறுப்பினர்களில் ஒருவரான கிரிப்ஸ் அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்ட வரைவு தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். இத்திட்டமானது இந்தியாவிற்கு மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையைப் பரிந்துரைத்தது, இந்த கூட்டாட்சி முறையில் டெல்லியிலுள்ள மத்திய அரசாங்கம் ஒருங்கிணைக்கப்பாளராகவும் வெளியுறவு விவகாரங்கள், தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் ஒன்றிய விவகாரங்களுக்கு மட்டுமான நிதி வழங்குதல் ஆகிய குறைந்தபட்ச, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இத்துணைக் கண்டத்தின் மாகாணங்கள் மூன்று பெரும் குழுக்களாக வகைப்படுத்தப்படும்: இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாகாணங்களான, பம்பாய் மாகாணம், மதராஸ் மாகாணம், ஐக்கிய மாகாணம், பீகார், ஒரிசா மற்றும் மத்திய மாகாணம்ஆகியன குழு- அ -வில் அடங்கும்; முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாகாணங்களான பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுச்சிஸ்தான் ஆகியன குழு – ஆ – வில் அடங்கும்; முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட வங்காளமும் இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அசாமும் குழு – இ – யில் அடங்கும். மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் இந்த மாகாண அரசாங்கங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்டு விளங்கும். இக்குழுவில் உள்ள சுதேச அரசுகள் பின்னர் அந்தந்த குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றின் அருகில் இருக்கும் மாகாணங்களோடு இணைக்கப்படும். உள்ளூர் மாகாண அரசுகள் தமது குழுவிலிருந்து வெளியேற வாய்ப்பு தரப்படும். ஆனால் அந்த மாகாண அரசின் பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் மட்டுமே அது சாத்தியமாகும். காங்கிரஸ் தலைவர்களும் ஜின்னாவும் அமைச்சரவைத்தூதுக்குழு திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத்தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்ததோடு, இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று நேரடி நடவடிக்கை நாளில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தது. கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின. இது கடுமையான வன்முறைத் தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றதோடு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதுவரை நாட்டைப் பிரிவினை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காந்தியடிகள் முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.

வேவல் பிரபுவைத் தொடர்ந்து மௌண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் அரச பிரதிநிதியாக பொறுப்பேற்றார். அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் அவர் இந்தியா வந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Price: ₹1,020.00

Buy Now Product Image

Based on School New Text Books

Price: ₹1,045.00

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Price: ₹1,068.00

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Price: ₹266.00

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Price: ₹246.00

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Price: ₹1,090.00

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Price: ₹800.00

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Price: ₹590.00

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

Price: ₹800.00