இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

அறிமுகம்

இரண்டாம் உலகப்போரின் துவக்கமும் அதை தொடர்ந்து, மாகாணங்களில் வீற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகளின் ஒப்புதல் பெறாமல் பிரிட்டிஷார் இந்தியாவைப் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தமையும் இந்திய தேசிய காங்கிரசையும் காந்தியடிகளையும் அரசியல் ரீதியாகத் தூண்டும் வகையில் அமைந்தது. தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாக காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி துறந்தனர். காந்தியடிகள் அக்டோபர் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத் துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தின் மனவலிமையை உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் சுபாஷ் தம் பதவியைத் துறந்தார். பின்னர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் துவக்கினார். பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கையால் சுபாஷ் ஜெர்மனி மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று அங்கு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி காங்கிரஸ் இயக்கத்திலிருந்து தனித்துப் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அதிருப்தியிலிருந்த தேசியவாதிகளை அரவணைக்கும் பொருட்டு மார்ச் 1942இல் கிரிப்ஸ் தூதுக்குழு வருகை புரிந்தது. ஆனால், அதன் முன்மொழிவில் எந்தப் பலனும் இருப்பதாகத் தெரியவில்லை . காந்தியடிகள் ஆகஸ்ட் 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால் பிரிட்டிஷாரோ காங்கிரசின் அனைத்துத் தலைவர்களையும் கைது செய்ததோடு, இயக்கத்தையும் இரும்புக்கரங்கொண்டு அடக்கினர். காந்தியடிகள் மே 1944 வரை சிறையில் கடும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின் வந்த அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டம் காங்கிரசாருக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. எனினும், பாகிஸ்தானின் உருவாக்கத்தை எதிர்பார்த்த ஜின்னாவும் அவர்தம் முஸ்லிம் லீக் கட்சியும் நேரடி நடவடிக்கை நாள் என்று விடுத்த அறைகூவலில் கிழக்கு வங்காளத்தில் வன்முறை வெடித்துக் கிளம்பியது. கலவர பூமியாக மாறியிருந்த நவகாளியில் இருந்து காந்தியடிகள் தமது அமைதிப் பயணத்தைத் துவக்கினார். இராஜாஜியின் சமரச முயற்சியும் வேவல் திட்டமும் அதை நிறைவேற்றும் பொருட்டு கூடிய சிம்லா மாநாடும் பேச்சுவார்த்தை முடக்கத்தைச் சரி செய்ய தவறின. இதற்கிடையே, இராயல் இந்தியக் கடற்படை, கலகத்தில் ஈடுபட்டமை பிரிட்டிஷாரை வேகமாக விடுதலை வழங்கத் துரிதப்படுத்தியது. விடுதலை வழங்கவும் இந்தியா – பாகிஸ்தான் என்று இத்துணைக்கண்டம் பிரிக்கப்படுவதை மேற்பார்வையிடவும் மௌண்ட் பேட்டன் அரசப்பிரதிநிதி நியமிக்கப்பட்டார்.

தனிநபர் சத்தியாகிரகம்

இதற்கு முன்பு பெருவாரியான மக்களை உள்ளடக்கிய இயக்கங்களை நடத்தி வந்த காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்கத் தனிநபர் சத்தியாகிரகம் என்ற வழியைக் கைக்கொண்டார். காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை மையப்படுத்தி போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ள தூண்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகள் தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதி, நேரம், இடம் போன்ற தகவல்களை மாவட்ட நீதிபதிக்குத் தெரிவித்துவிட வரையறுக்கப்பட்டது. குறித்த நேரத்தில் சரியான இடத்தை வந்தடைந்த சத்தியாகிரகிகள் முழங்க வேண்டியதாவது: பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு மனிதசக்தியாகவோ பணமாகவோ உதவிபுரிதல் தவறாகும். ஒரே உருப்படியான செய்கை என்பது வன்முறையைக் கைக்கொள்ளாமல் எல்லாவிதத்திலும் போர் முயற்சிகளை எதிர்ப்பதேயாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் கைதாவது அடுத்தகட்டமாகும்.

வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னர் ஆசிரமத்தருகே 1940 அக்டோபர் 17இல் முதல் சத்தியாகிரகத்தை நடத்தியதின் வாயிலாக இவ்வியக்கம் தொடங்கப் பெற்றது. காந்தியடிகள் டிசம்பர் 1940இல் இவ்வியக்கம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். மேற்கொண்டு சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின் மீண்டும் ஜனவரி 1941இல் குழு சத்தியாகிரகமாக உருவெடுத்தபோதும் அதை ஆகஸ்ட் 1941இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

ஆகஸ்ட் கொடை

தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசபிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும். லின்லித்கோ பிரபு 1940 ஆகஸ்ட் 8இல் அளிக்க முன்வந்ததாவது: வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரசபிரதிநிதியின் குழுவை (செயற்குழு ) விரிவாக்கம் செய்தல், இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல், போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க உறுதியளித்தல் ஆகியவையாகும்.

காங்கிரஸில் இருந்து போஸ் நீக்கப்படுதல்

ஆகஸ்ட் கொடை மிகத்தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தக் கூட காங்கிரசுக்கு நேரமில்லை . இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை 1938-39இல் 4.5 மில்லியன் என்ற நிலையிலிருந்து 1940-41இல் 1.4 மில்லியன் என்ற அளவுக்குச் சரிந்திருந்தது. காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல் மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939இல் அவர் காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

லாகூர் தீர்மானம்

ஒருபுறம், தேதி அறிவிக்கப்படாத டொமினியன் அந்தஸ்து என்ற நிலைக்கும் போரில் பங்கெடுத்தால் அதன் முடிவிற்குப் பின் விடுதலை வழங்க வலியுறுத்திய இந்தியர்களின் நிலைப்பாட்டிற்கிடையே சுமூகமான தீர்வை எட்ட அனுமதிக்காத காலனிய அராஜகப்போக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்றால் மறுபுறம் வேறொரு சிக்கல் முளைத்தது. அது இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும். இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்து 1940 மார்ச் 23இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.

இத்தகைய கோரிக்கையை முஸ்லிம் லீக் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் முன்வைக்க காலனி ஆட்சியாளர்களே தூண்டுதலாக இருந்ததற்கான ஆதாரங்கள் வெகுவாக உள்ளன. இத்தீர்மானத்தின் மூலம் பிரிட்டிஷார் போர் நடவடிக்கைகளில் காங்கிரசின் ஆதரவை வேண்டிய போதும் அவர்களோடு பேச்சுவார்த்தையை நிராகரிக்க ஒரு தெம்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அமைப்புரீதியில் காங்கிரஸ் இக்கால கட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவிழந்து காணப்பட்டது. அதன் தலைவர்கள் அச்சு நாடுகளின் – ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் – கொள்கைக்கு எதிரான பிரிட்டிஷாரின் போர் என்பதால் தங்கள் ஆதரவை சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மக்களாட்சியைப் பாதுகாக்கும் பொருட்டும் உறுதி செய்ய வேண்டிய நிலை இருப்பதை உணர்ந்தனர். போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார்.

இவையெல்லாம் 1940இன் முக்கிய போக்குகளாகும். ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின. இதனால் விடுதலைக்கு ஒப்புதல் வழங்காமலேயே போர் முயற்சிகளில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டிய அவசரமான சூழல் உதித்தது. போர்க்கால அமைச்சரவையைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸை காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்தார்.

கிரிப்ஸ் தூதுக்குழு

தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்

நேச நாடுகளுக்கு 1941ஆம் ஆண்டு மோசமானதாக விளங்கியது. பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நார்வே, ஹாலந்து ஆகிய நாடுகள் ஜெர்மனி வசம் சிக்கியதோடு பிரிட்டனும் பல பின்னடைவுகளை எதிர்கொண்டது. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தென்கிழக்கு ஆசியாவிற்குள் ஜப்பான் படைநடத்திச் சென்றதேயாகும். இந்நிகழ்வு முத்துத் துறைமுகம் (Pearl Harbour) என்ற அமெரிக்க துறைமுகம் 1941 டிசம்பர் 7இல் தாக்கப்பட்ட சமகாலத்தில் நடந்தேறியது. அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும், சீனக் குடியரசுத்தலைவரான ஷியாங் கே – ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப்போக்கை நிறுத்த முனைந்தனர். அவர்களின் கண்காணிப்பு கவனத்திற்குள் இந்தியா சென்றதால், அவர்கள் பிரதமர் சர்ச்சிலை இந்திய மக்களின் முழு ஒத்துழைப்பைப் பெறக்கோரி அழுத்தம் கொடுத்தனர்.

ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில் பிலிப்பைன்ஸ், இந்தோ – சீனா, இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின. தென்கிழக்கு ஆசியாவின் வீழ்ச்சி பிரிட்டிஷாரையும், இந்திய தேசிய காங்கிரசையும் கவலை கொள்ளச் செய்தது. பிரிட்டிஷ் படைகள் எதிர்த்து நிற்கமுடியாமல் ஓடிப் போயின. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் இந்திய வீரர்கள் ஜப்பானியப் படைகளின் தயவில் விடப்பட்டனர். பின்னர் உருவான இந்திய தேசிய இராணுவம் இந்நிலையில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டது. அது பற்றி விரிவாக இப்பாடத்தில் காண்போம் (தொகுதி 7.3). சர்ச்சில் கல்கத்தாவும், மதராசும் ஜப்பானியர் பிடியில் விழக்கூடும் என்று அஞ்சினார். காங்கிரஸ் தலைவர்களும் அவ்வாறே அச்சம் கொண்டதால் போர் நடவடிக்கைகளில்ஒ த்துழைக்க வழிவகை செய்யும் ஒரு கௌரவமான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர்.

இச்சூழலில் டிசம்பர் 1941இல் கூடிய காங்கிரஸ் செயற்குழு போருக்குப் பின் விடுதலையையும், உடனடியாக முக்கியப் பிரிவுகளில் அதிகாரப் பகிர்வையும் உறுதியளிக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் தாங்கள் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

கிரிப்ஸ் வருகை

சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவக் குழு மார்ச் 1942இல் இந்தியா வந்தடைந்தது.சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் தொழிலாளர் கட்சியின் சார்பில் பங்கு வகித்தமையே கிரிப்ஸ் குழு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவிற்குப் புறப்படும் முன்பாக அவர் பிரிட்டிஷாரின் கொள்கை நிலைப்பாடு இந்தியாவைப் பொறுத்தமட்டில் ‘விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசுமுறையை நிறுவுதல் என்று மொழிந்திருந்தார். ஆனால் அவர் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கு முன்பாக வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .

கிரிப்ஸின் முன்மொழிவு

கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக் குழுவை உருவாக்குதலையும் ஆதரித்தார். அரசியல் சாசன வரைவுக் குழு மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும் சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டும் ஏற்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. மேலும் அதில் பாகிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏதாவது ஒரு மாகாணத்திற்குப் புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாகக் கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இவ்வரைவு பழைய வரைவுகளிலிருந்து எந்த மாற்றத்தையும் உள்ளடக்கியதாக யாருக்கும் தெரியவில்லை . இது பற்றி பின்னர் நேரு குறிப்பிடுகையில், “நான் முதன்முறையாக இவ்வரைவை வாசித்த போது, கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன்” என்றார்.

கிரிப்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப்படல்

டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும். மேலும் அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் சுதேசி அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது. இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பமாகும். அதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.

முத்துத்துறைமுகம் (Pearl Harbour) தாக்கப்பட்ட வேளையில் காங்கிரஸ் முன்னிருந்த சவால்கள்

துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய இயக்கத்தையும் குறிப்பாக காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் சர்ச்சில் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்ற சூழலில் அமெரிக்காவும் சீனாவும் கடும் செல்ல நெருக்கடி கொடுத்தார்.

இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரசும் நிற்கதியற்ற நிலையில் விடப்பட்டிருந்தது. அந்நிலை இருவேறு வகைகளில் ஏற்பட்டிருந்தது : ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலனிய அரசு இழுத்தடித்தது என்றால் மறுபுறம் சுபாஷ் சந்திர போஸ் அச்சு நாடுகளோடு கைக் கோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார். ஜெர்மனியில் இருந்து மார்ச் 1942இல் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

காந்தியடிகள் மே 1942இல் இந்திய தேசிய காங்கிரசை அடுத்த கட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார். இம்முறை, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க காந்தியடிகள் முனைந்த நேரத்தில் இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர். ஒரு போராட்டத்திற்கு உகந்த சூழல் உருவாகி இருந்தது. பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு உணவு தானியங்களுக்குக் கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

காங்கிரசின் வார்தா கூட்டம்

இப்பின்புலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூலை 14இல் வார்தாவில் சந்தித்தது. இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர். நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.

‘செய் அல்லது செத்துமடி’ எனும் முழக்கம்

கிரிப்ஸ் தூதுக்குழுவோடு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் காந்தியடிகளையும் நேருவையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷார் மீது நம்பிக்கை இழக்க வைத்தது. இதை காந்தியடிகள் 1942 மே 16இல் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்: இந்தியாவைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள், அது அதீதமான ஒன்றாக இருக்குமானால் அதை இயற்கையின் அராஜகப் போக்கில் கூட விட்டு விடுங்கள் இவ்வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை கொண்ட அராஜகம் நீங்கிச் செல்வதால் முற்றிலும் தறிகெட்டு சட்ட சீர்கேடு ஏற்பட்டாலும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.” என்றார். அதன்பின் அவர் மக்களை நோக்கி செய் அல்லது செத்துமடி என்று கூறி முடிவை நோக்கிய ஒரு சண்டையாகக் கருதி தனது மறுப்பியக்கத்தைத் துவக்கினார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்

காலனிய அரசு தாமதிக்காமல் காந்தியடிகள் உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும் 1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் கைது செய்து சிறையில் தள்ளியது. இந்திய மக்களும் தாமதிக்கவில்லை . விடியலின் முன்பே நடந்த கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் கடையடைப்புகளும் காவல்துறையினரோடு வன்முறை மோதலும் பதிலடியாகத் தரப்பட்டது. இந்தியா முழுமையிலும் தொழிலாளிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20இல் துவங்கி 13 நாட்கள் நடைபெற்றது. அகமதாபாத்தின் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் தொழிற்சாலைகளைக் கொண்ட அனைத்து நகர்ப்புறங்களும் சிறிது காலமாவது வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன.

அரசாங்கத்தின் மனிதத்தன்மையற்ற அடக்குமுறை

காலனிய அரசு கடும் அடக்குமுறை உத்திகளையும் பல இடங்களில் காவல்துறையினரின் மூலம் துப்பாக்கிச் சூட்டையும் கைக்கொண்டது. எதிர்ப்பை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டதிலிருந்து, எந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்திருக்கும் என்பதையும் அது சார்ந்த அடக்குமுறையையும் உணர்ந்து கொள்ள 57 பட்டாலியன் இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதையும் சான்றாகக் கொள்ளலாம். சில இடங்களில் விமானப்படையைக் கொண்டு மக்கள் கலைக்கப்பட்டனர்.நிலைமையின் தீவிரத்தையும் அதன் அழுத்தத்தையும் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கு விளக்க விழைந்த லின்லித்கோ பிரபு தாம் எதிர்கொண்ட எதிர்ப்பைப் பற்றி எழுதுகையில் 1857 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின் கவலை கொள்ளவைக்கும் ஒரு வளர்ச்சி; எனினும், அதன் முக்கியத்துவத்தையும் வீரியத்தையும் இராணுவக் காரணங்களுக்காக உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

எதிர்ப்பின் ஆரம்பகட்டம் நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டு தொழிலாளர்களையும், மாணவர்களையும் உள்ளடக்கியதாகவும், அது இரும்புக்கரங்கொண்டு அடக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் மக்கள் எழுச்சி அதோடு முழுமையடையவில்லை. இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களில் பரவியது. உணவு தானியங்களின் விலை ஏப்ரல் 1942இல் இருந்து அதே ஆண்டு ஆகஸ்டுக்குள் அறுபது புள்ளிகள் அளவில் ஏறியதே வெறுப்புக் கிளம்பக் காரணமாக அமைந்தது. மேலும் காங்கிரசிற்குள் இருந்த சோஷலிசவாதிகள் காவல்துறையினரின் ஆகஸ்ட் 9 நடவடிக்கையில் சிக்காமல் கிராமப்புறங்களுக்குள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களை கொரில்லா நடவடிக்கை மூலம் ஒருங்கிணைத்தார்கள்.

கட்டவிழ்ந்த வன்முறை

இவ்வியக்கம் செப்டம்பர் 1942லிருந்து தாக்குதல்களையும் அரசின் தொலைத்தொடர்பு வசதிகளான தந்திக்கம்பிகளையும் இருப்புப் பாதைகளையும் இரயில் நிலையங்களையும் நாசமாக்குவதையும் அரசு அலுவலகங்களுக்கு நெருப்பு வைப்பதையும் உத்தியாகக் கொண்டிருந்தது. இது நாடு முழுவதும் பரவியபோதும் கிழக்கு ஒருங்கிணைந்த மாகாணங்களிலும் பீகார், மகாராஷ்டிரா மற்றும் வங்காளப் பகுதிகளிலும் அதிதீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளில் தேசியவாத அரசை நிறுவிவிட்டதாக பறை சாற்றிக் கொண்டனர். இதன் ஒரு உதாரணமாக வங்காளத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1944 வரை ஏற்படுத்தப்பட்டிருந்த தம்லுக் ஜாட்டியா சர்க்கார் (Tamluk Jatiya Sarkar) அரசைக் கூறலாம். சதாராவிலும் ஓர் இணை அரசாங்கம் செயல்பட்டது.

சோஷலிசவாதிகளான ஜெயபிரகாஷ் நாராயண், அச்சுத் பட்வர்தன், ஆஸப் அலி, யூசுப் மெஹ்ரலி, இராம் மனோகர் லோகியா போன்றோர் தலைமை தாங்கினர். காந்தியடிகள் 1943 பிப்ரவரி 10இல் சிறைச்சாலையில் துவக்கிய 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனையாக அமைந்து இயக்கத்திற்கு (சில நெறிமுறைகளுக்கு உட்பட்ட வன்முறைக்கும்) வலுவேற்றியது.

இயக்கத்தின் பரவலும் அதன் தீவிரமும்

இயக்கத்தை ஒடுக்க பிரிட்டிஷார் பயன்படுத்திய வலுவைக்கொண்டே அதன் வேகமான பரவலையும், அது ஏற்படுத்திய தீவிரப்போக்கையும் புரிந்துகொள்ள முடிகிறது. கைதானவர்களின் எண்ணிக்கை 1943ஆம் ஆண்டின் முடிவில் 91,836 என்ற அளவை எட்டியது. அதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது. அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும் (out post) 332 இருப்புப்பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவும் சேதத்திற்கு உட்படுத்தப்படவும் இயக்க நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன. குறைந்தபட்சம் 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்துப் புரட்சியாளர்களோடு கைக்கோர்த்தார்கள். ஆசம்கரின் ஆட்சியராக இருந்து புரட்சியாளர்களின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட R.H . நிப்ளெட் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தப் பதிவின்படி பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப்பலகிராமங்களைத் தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்குத் தீயைப் பரவவிட்டு வெள்ளை பயங்கரத்தை அரங்கேற்றி அடக்குமுறையே ஆட்சிமுறை என்ற அளவுக்கு அக்காலகட்டத்தில் நடந்துகொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கிராமத்தின் பொதுச்சொத்திற்குச் சேதம் ஏற்பட்டதால் கிராமமக்கள் அனைவரிடம் இருந்தும் அபராதம் பெறப்பட்டது.

இரகசிய வானொலி ஒலிபரப்பு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டமை ஆகும். பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்ட நிலையில் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறைமையை நிறுவினர். அதன் ஒலிபரப்பி (transmitter) ஓரிடத்தில் என்றில்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பதோடு அதன் ஒலிபரப்பு மதராஸ் வரை கேட்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய தகவலாகும்.

இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது. இவ்வியக்கம் காங்கிரஸ், சோஷலிசவாதிகள், ஃபார்வர்டு பிளாக் கட்சி என்று அனைவரின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும். மேலும் இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டுவந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறைசாற்றியது.

காந்தியடிகளின் விடுதலை

உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக 1944 மே 6இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காந்தியடிகள் தனது ஆக்கபூர்வமானச் செயல் திட்டங்களை மேற்கொள்ளலானார். காங்கிரஸ் அமைப்பும் பொதுவெளிக்கு வராமல் தங்கள் பணியைச் செவ்வனே மேற்கொண்டதன் மூலம் வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தின் தடையைச் சுமூகமாக எதிர்கொண்டது. இதற்கிடையே காலனிய அரசு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஒரு திட்டத்தை முன்வைத்தது. லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அக்டோபர் 1943இல் அரசபிரதிநிதிப் பதவியேற்ற ஆர்கிபால்டு வேவல் பிரபு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைச் சுற்றுக்கு ஆயத்தப்படுத்தலானார். இதனால் தெளிவாக வெளிப்பட்ட செய்தி ஒன்று தான் : பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர பிரிட்டிஷாருக்கு வேறு வழி இருக்கவில்லை.

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

பிரிட்டிஷ் பேரரசிற்கு உட்பட்ட மலேயா, பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு பெரும் இந்தியப் படை நிறுத்தப்பட்டது. இப்படைகளால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கமுடியவில்லை. தென்கிழக்கு ஆசியாவில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படைவீரர்களைப் போர்க்கைதிகளாய் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

மலேயாவில் இவ்வாறு கைவிடப்பட்ட பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் ஜப்பானியர்களின் உதவியை நாடியபோது, அவர்களும் அதில் ஒரு நல்ல வாய்ப்பைக் கண்டார்கள். ஜப்பானும் சீனாவில் தனது காலனியை நிறுவ முனைந்ததேயொழிய இந்தியாவைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க்கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர். ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க்கைதிகள் உருவானதில் மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 45,000 என்ற அளவை எட்டியது. இவர்களில் இருந்து 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை மோகன் சிங் பலப்படுத்தினார். ஜப்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய தேசிய இராணுவத்தையும் மோகன் சிங்கையும் ஒரு பாதுகாவலராகப் பார்த்தாலும் அவருடன் இருந்த அதிகாரிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அழைப்புவிடுத்தாலொழிய இந்தியா மீது படைநடத்தி செல்லப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

1943 ஜுலை 2இல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார். அங்கிருந்து டோக்கியோ சென்று பிரதமர் டோஜோவைச் சந்தித்தார். ஆனால் இந்தியாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இல்லை என்று ஜப்பானிய அரசர் அறிவித்தார். எனவே சிங்கப்பூருக்குத் திரும்பிய போஸ் 1943 அக்டோபர் 21இல் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்தினார். இத்தற்காலிக அரசு பிரிட்டன் மீதும் பிற நேச நாடுகள் மீதும் போர் அறிவிப்பு செய்தது. அச்சு நாடுகள் போசின் தற்காலிக அரசை தமது நட்பு வளையத்துக்குள் ஏற்றுக்கொண்டன.

போஸும் இந்திய தேசிய இராணுவமும்

போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்ததோடு பெண்களுக்கான ஒரு படைப்பிரிவையும் ஏற்படுத்தினார். மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்குத் தலைமையேற்றார். சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜுலை 6இல் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார். காந்தியடிகளைத் தேசத்தின் தந்தையே” என்று அழைத்த அவர் இந்தியாவின் கடைசி விடுதலைப் போருக்கு அவர்தம் ஆசியைக் கோரினார்.

வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஆகஸ்டு 1939 இல் இந்திய தேசிய காங்கிரசால் விடுவிக்கப்பட்ட போஸ், தனக்கு ஆதரவு திரட்டி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலானார். இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1940 ஜுலை 3 அன்று கைது செய்யப்பட்ட அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மேற்கொண்டு ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்தப் போரில் ஜெர்மனியே வெல்லும் என்று போஸ் நம்பினார். அவர் அச்சு நாடுகளோடு கைக் கோர்ப்பதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்ற சிந்தனையை வளர்த்தெடுத்தார். கல்கத்தாவிலிருந்து 1941 ஜனவரி 16-17இன் நள்ளிரவில் தப்பிய அவர், காபூல் மற்றும் சோவியத் நாடு வழியாக ஒரு இத்தாலியக் கடவுச்சீட்டைக் கொண்டு மார்ச் மாதத்தின் கடைசியில் பெர்லின் சென்று சேர்ந்தார். அங்கு ஹிட்லரையும் கோயபல்ஸையும் சந்தித்தார். இரு நாசிச தலைவர்களும் பெரிதாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றாலும் ஆசாத் ஹிந்த் ரேடியோவை உருவாக்க அனுமதி வழங்கினர். ஹிட்லரையும், அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களையும் சந்தித்தபோதும் போஸால் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியவில்லை. போரில் ஜெர்மனிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, போஸ் 1943 ஜுலையில் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.

போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்

இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது. இது அச்சு நாடுகளும் ஜப்பானியப் படைகளும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்த 1944இன் பிற்பகுதியில் நடந்தேறியது. இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிப் பெற முடியாததைத் தொடர்ந்து 1945இன் நடுவில் அது பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தது. கைது செய்யப்பட்ட ஷா நவாஸ் மீதும் அவரோடிருந்த வீரர்கள் மீதும் இராஜ துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது மிகச் சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு அவர்கள் சார்பாக வாதாடியது இந்திய வரலாற்றில் சிறப்பான ஒரு அம்சமாகும். காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து ஒத்துழையாமை இயக்கத்தின் பின்புலத்தில் 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளைத் துறந்த ஜவஹர்லால் நேரு , நீண்ட இடைவெளிக்குப் பின் தனது கருப்பு அங்கியை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார். இராணுவரீதியாக இந்திய தேசிய இராணுவம் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற போதும், அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணை பொது மக்களைப் பெரிதும் கவர்ந்ததோடு ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

காலனிய அரசின் பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது. இந்திய தேசிய காங்கிரசும் 1945 ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியது. அண்மையில் இந்திய அரசியல் சட்டம், 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில் ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.

இப்பின்புலத்தில் காலனிய ஆட்சியாளர்கள்ஷா நவாஸ் கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லான் – ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது. இந்திய நாட்டின் பத்திரிகைகள் யாவும் இவ்விசாரணையை உணர்ச்சிகரமாகப் பிரசுரித்ததோடு தலையங்கங்கள் அனைத்திலும் அவர்தம் விடுதலைக்காகக் கோரிக்கை வைத்தன. கடையடைப்புகளும் ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் கடைபிடிக்கப்பட்டபோது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

இம்மூன்று அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் அனைத்து அரசியல் கருத்துப் பிரிவினைகளும் ஓரணியின்கீழ் வர வழியேற்பட்டது. அதுவரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்த முஸ்லிம் லீக் , சிரோமணி அகாலி தளம், இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கியதோடு சிறைப்பட்ட வீரர்களின் வழக்குச் செலவிற்காக நிதி திரட்டவும் செய்தன. விசாரணை நீதிமன்றம் ஷெகல், தில்லான், ஷா நவாஸ் கான் ஆகியோரின் குற்றத்தை உறுதிப்படுத்தினாலும், முப்படைகளின் தளபதி (Commander-in-chief) அவர்க ளின் தண்டனையைக் குறைத்ததோடு 1946 ஜனவரி 6இல் அவர்களை விடுதலை செய்தார். இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணை பிப்ரவரி 1946இல் இந்திய தேசிய இயக்கத்தை மற்றுமொரு முக்கியமான நிகழ்வுக்கு எடுத்துச் செல்ல மேடையமைத்தது. அதன்படி இராயல் இந்தியக் கடற்படையின் (RIN) மாலுமிகள் கலகக் கொடியைத் தூக்கினர்.

இராயல் இந்திய கடற்படையின் கலகம்

போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு விலைவாசி ஏற்றத்திலும் உணவு தானியப் பற்றாக்குறையிலும் போர்க்காலத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் அதனால் ஏற்பட்ட ஆட்குறைப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் மூலமும் எதிரொலித்தது. இவையாவும் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வாகக் கிளம்பி ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த இந்திய தேசிய இராணுவ விசாரணை எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.

HMIS தல்வார் என்ற போர்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய (ஆங்கிலத்தில் ரேட்டிங் என்று வழங்கப்பட்ட இப்பதவிப் பெயரே பல்வேறுபட்ட போர்கப்பல்களிலும் இராயல் இந்திய கடற்படையின் போர்கப்பல்களிலும் பணியாற்றிய மாலுமிகளைக் குறிப்பதாக அமைந்தது) B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார். இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய 1,100 மாலுமிகள் உடனடியாகப் போராட்டத்தில் இறங்கினர். ஆங்கிலேய அதிகாரிகளின் நிறவெறியையும் மோசமான உணவு வழங்கப்பட்டமையையும் பிற தரக்குறைவான செயல்பாடுகளையும் மாலுமிகள் கண்டனம் செய்தனர். தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது. அதன் மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கலகத்தில் இணைந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பி ஆரவாரிக்கவும் செய்தனர்.

விரைவில் பம்பாய் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப் போராட்டத்தில் இறங்கினர். பம்பாய் மற்றும் கல்கத்தாவின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியதில் இரு நகரங்களும் போர்முனைகள் போல் காட்சியளித்தன. நகர் முழுவதிலும் தடுப்பரண்கள் ஏற்படுத்தப்பட்டு முழுவீச்சில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆங்காங்கே குறுகிய நேரச் சண்டைகள் நடந்தேறின. நாள்தோறும் வியாபாரிகள் கடைகளை அடைத்துச் சென்றதில் பொதுவான வர்த்தகம் பெரிதும் தடைப்பட்டது. இருப்புப்பாதைகளில் மக்கள் வந்து கூட்டமாக அமர்ந்ததில், இருநகரங்களிலும் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பம்பாயின் கலகச் செய்தி கராச்சியை அடைந்ததும் பிப்ரவரி 19இல் HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறரும் மின்னல் வேகத்தில் போராட்டத்தைத் துவக்கினர். போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரைசார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 1946 பிப்ரவரி 18க்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர். மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பாலா நகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப்படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஜபல்பூரில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவச் சிப்பாய்களும் போராடலாயினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.

இவ்வனைத்தையும் காலனிய அரசு கடும் அடக்குமுறையை வெளிப்படுத்தியே எதிர்கொண்டது. உண்மையில் இக்கலகம் தலைவனில்லாத ஒன்றாகும் என்பதோடு மாலுமிகள் குறிப்பான எந்தத் திசையிலும் நகரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பம்பாய், கல்கத்தா, மதராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய ஆட்சிக்கு எதிரான உணர்வுக் குவியலாகத் தெரிந்தாலும் அவை நீண்டகாலம் நீடிக்க முடியாததால் இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.

அப்போது பம்பாய் நகரில் இருந்த சர்தார் வல்லபாய் படேல் கலகத்தை முடிவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். எவ்வாறாயினும், இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது.

மார்ச் 23, 1940 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: பூகோளரீதியில் தொடர்ச்சியாக அமையப்பெற்ற பகுதிகள் பிரிக்கப்பட்டும் தேவைக்கேற்ப இந்தியாவின் வடமேற்கிலும் கிழக்குப் பகுதியிலும் எண்ணிக்கை அளவில் இஸ்லாமியப் பெரும்பான்மை இருப்பது போன்றப் பகுதிகளை உருவாக்கி இவையாவற்றையும் இணைத்து தன்னாட்சியும் இறையாண்மையும் கொண்டவைகளாக மாற்றி அதிலிருந்து ஒரு தனி நாட்டை உருவாக்க வேண்டும். (மூலம்: சுமித் சர்க்கார், மாடர்ன் இந்தியா 1885-1947 (ஆங்கிலம்), பியர்சன், 2018, பக்கம் 324)

இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும்

தனிநாடு கோரிக்கை

இவ்வளர்ச்சிகளுக்கிடையே மதவாதம் எழுப்பிய சவால்களும் முஸ்லிம் லீக்கின் தனிநாடு கோரிக்கையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. முஸ்லிம் லீக் மார்ச், 1940இல் நிறைவேற்றிய லாகூர் தீர்மானத்தின்படி இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலையிலிருந்து அவர்கள் ஒரு தனிநாடு என்ற நம்பிக்கைக்கு மாறிப்போயிருந்தனர். அச்சமயத்தின் ஒரே பிரதிநிதியாக முகமது அலி ஜின்னா தன்னை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார்.

இராஜாஜி திட்டம் (C.R. Formula)

1944 ஏப்ரலில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்த நிலையில் சுமூகமானத் தீர்வை எட்டும் பொருட்டு இராஜாஜி ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார். அதன் அம்சங்களாவன:

  • போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
  • ஒருவேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதி செய்யப்பட்டால், அதிமுக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
  • எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  • இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

காந்தியடிகள் ஜூலை, 1944இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை .

வேவல் திட்டம்

வேவல் பிரபு ஜூன், 1945இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார். ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், அச்சமயம் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகப் பதவி வகித்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில் பங்கெடுப்பதற்காகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சிம்லா மாநாட்டிற்கு முகாந்திரம் அமைக்கும் பொருட்டு மார்ச், 1945இல் லண்டன் சென்ற வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குப் பின் எழும் நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸையும், முஸ்லிம் லீக்கையும் இணைத்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.

அனைத்துக் கட்சிப் பின்புலத்திலிருந்தும் தலைவர்களைத் தெரிந்து – அதிலும் குறிப்பாகக் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்லீக்கின் தலைவர்களை – அவர்களின் முன்பாக அரச பிரதிநிதி வைத்த முன்மொழிவின்படி அரசபிரதிநிதி, முப்படைகளின் தளபதி (commander-in-chief), இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லிம்கள் போன்றோருக்குச் சம அளவில் பிரதிநிதித்துவமும் பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவக்கத் திட்டமிடப்பட்டது.

இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாக இல்லை. தீர்மானமெதையும் எட்டாமலேயே ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடந்த சிம்லா மாநாடு முடிவடைந்தது. குறிப்பாக அரசபிரதிநிதியின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரசிற்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இருந்த உரிமை பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

முஸ்லிம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்று வாதிட்டதோடு காங்கிரஸ் உயர்வகுப்பு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்றும் அது ஒரு முஸ்லிமையோ ஒடுக்கப்பட்ட சமூகத்தவரையோ நியமிக்கக்கூடாதென்றும் வலியுறுத்தியது. இது மக்களை மேலும் இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்றும் அனைத்து இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த காங்கிரஸிற்கு இருந்தத் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் கருதப்பட்டது. முஸ்லிம் லீக்கின் பங்களிப்பில்லாமல் ஒரு குழு முழுமைபெறாது என்று வேவல் பிரபு கருதியதால் அவர் சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.

முஸ்லிம்களின் தேசிய அடையாளமானது 1940இன் லாகூர் தீர்மானத்துக்கும் 1945இன் சிம்லா மாநாட்டுக்கும் பின்னர் முழுமைப்பெற்று அதன் ஒரே நாயகராக ஜின்னா உறுதியாக நிலைப்பெற்றார். டெல்லியில் ஏப்ரல் 1946இல் நடந்த முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட தனிநாடு என்று வர்ணிக்கப்பட்டது. முதன்முறையாக அதன் பூகோள வரையறையையும் வெளிப்படுத்திய முஸ்லிம் லீக் வடகிழக்கில் வங்காளத்தையும், அசாமையும் போன்று வடமேற்கில் பஞ்சாப், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டியது. இதை நிராகரித்த காங்கிரஸ் தலைவரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர் சார்ந்த இயக்கம் முழு விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த இந்தியாவையே ஆதரிக்கும் என்றார்.

இவையாவும் ஜூன் முதல் ஜூலை 1945 வரையான காலத்தில் நடந்த சிம்லா மாநாட்டையொட்டி நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில் சர்ச்சில் பதவியிழந்து அவர் பொறுப்பில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிளெமண்ட் அட்லி பதவிக்கு வந்தார். காலம் கணிசமாக மாறிப்போயிருந்தது. பிரிட்டிஷ் பிரதமரான அட்லி விடுதலையை உறுதி செய்ததோடு அதற்கான நடைமுறைகள் மட்டுமே எஞ்சி இருப்பதாய் அறிவித்தார்.

அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம்

அமைச்சரவைத் தூதுக்குழு

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர், பெதிக் லாரன்ஸ் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தத் தூதுக்குழு மார்ச் 1946இல் இந்தியா வந்தடைந்து முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது. இத்தூதுக்குழு மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது. இவ்வேளையில் இந்தியப்பிரிவினை பற்றிய சிந்தனைகள் ஏதும் முக்கியத்துவம் பெறவில்லை . எனினும் அதற்கு மாற்றாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் முஸ்லிம் லீக்கின் செல்வாக்கை நிறுவும் வகையில் கூட்டாட்சி போன்றதொரு அமைப்பையும், இந்தியாவின் பிற பகுதிகளைக் காங்கிரஸ் நிர்வகிக்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு 1946 ஜூன் 6இல் ஜின்னா ஒப்புதல் அளித்தார். இதற்கிடையே காங்கிரசும் அமைச்சரவைத் தூதுக்குழுவின் நோக்கத்தில் சட்டசபையை உருவாக்க இருந்தத் தீவிரத்தைப் புரிந்து கொண்டது. இது குறித்து 1946 ஜூலை 7இல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் பேசிய நேரு இந்திய தேசிய காங்கிரஸ் அந்த முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாகத் தெரியப்படுத்தினார். ஆனால், இதையடுத்து 1946 ஜூலை 29இல் பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம்முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

நீண்ட கலந்தாலோசனைகளுக்குப் பின் 1946 ஜூன் 15இல் அரசபிரதிநிதி இடைக்கால அரசை நடத்த 14 பேருக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் சார்பாக ஜவஹர்லால் நேரு , வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், இராஜாஜி மற்றும் ஹரி கிருஷ்ண மஹ்தப் ஆகியோரும் முஸ்லிம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா , லியாகத் அலி கான், முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நஜிமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோரும், சீக்கியர்கள் சார்பாக சர்தார் பல்தேவ் சிங்கும், பார்சிகளின் சார்பில் சர் N.P. இஞ்சினியரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக ஜெகஜீவன் ராமும் இந்திய கிறித்தவர்கள் சார்பாக ஜான் மத்தாயும் ஆவர்.

இடைக்காலக் குழுவில் பங்கெடுக்க தங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இடங்களில் ஒன்றனுக்கு ஜாகிர் ஹூசைன் பெயரை காங்கிரஸ் முன்மொழிந்தது. இதற்கு 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்ததோடு தாங்கள் சட்டசபையில் பங்கெடுக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதற்கு ஆங்கிலேய நிர்வாகம் கடுமையான எதிர்வினையாற்றியது. அரசபிரதிநிதி 1946 ஆகஸ்ட் 12 அன்று, தான் காங்கிரஸ் தலைவர் நேருவை அழைத்து இடைக்கால அரசை உருவாக்கப் போவதாகத் தெரிவித்தார். நேருவோடு கலந்தாலோசித்த பின் 1946 ஆகஸ்ட் 25இல் தேசிய இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் நேரு உட்பட வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, இராஜாஜி, சரத் சந்திர போஸ், ஜான் மத்தாய், சர்தார் பல்தேவ் சிங், சர் ஷாஃப்த் அகமது கான், ஜெகஜீவன் ராம், சையது அலி ஸாகீர் மற்றும் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா ஆகியோர் ஆவர். மேலும் இரு இஸ்லாமியர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஐந்து இந்துக்கள், மூன்று முஸ்லிம்கள், பட்டியல் இனம், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் போன்றோரில் இருந்து தலா ஒரு நபர் என்ற அடிப்படையில் பட்டியல் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஹரி கிருஷ்ண மஹ்தபின் இடத்தில் சரத் சந்திர போஸ் நியமிக்கப்பட்டார். அது போலவே பார்சி இனத்தில் N.P. இஞ்சினியர் இடத்தில் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா நியமிக்கப்பட்டார். முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை நியமித்தது. அவர்கள் ஆசப் அலி, ஷாபத் அகமது கான், மற்றும் சையது அலி ஸாகீர் ஆகியோர்.

முஸ்லிம் லீக் 1946 ஆகஸ்ட் 16இல் நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது. கல்கத்தாவிலும், டெல்லி உட்பட பிற பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது. ஒரு சில சீடர்களை அழைத்துக்கொண்ட காந்தியடிகள் கல்கத்தாவை வந்தடைந்து அங்கே பேலிகாத்தா என்ற மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியின் புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க முடிவுசெய்தார். டெல்லியில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள் தற்காலிக முகாம்களில் (புராணா கிலா என்ற பழையக் கோட்டை போன்ற இடங்களில்) தங்கவைக்கப்பட்டனர். டெல்லியை காந்தியடிகள் வந்தடைந்தபின் (1946 செப்டம்பர் 9) அவர் இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களைப் பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பேயாகும் (நேரு அச்சமயம் இடைக்கால அரசிற்குத் தலைமை ஏற்றிருந்தார்) என்று வலியுறுத்திய பின்பே டெல்லியின் அதிகாரமட்டம் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி கழிவறை வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

உண்மையில் இப்பின்புலத்தில்தான் காங்கிரஸ் இடைக்கால அரசு உருவாக்கத்தை ஏற்றுக்கொண்டது. நேருவும் மற்ற பதினோரு நபர்களும் 1946 செப்டம்பர் 2இல் பதவியேற்றனர். அதன்பின் ஒரு இனக்கலவரம் வெடித்துக் கிளம்பிய போது அது பம்பாயையும், அகமதாபாத்தையும் கடுமையாகத் தாக்கியது. வேவல் பிரபு மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி நேருவின் ஆலோசனையைப் பெற்று மீண்டும் முஸ்லிம் லீக்கை இடைக்கால அரசில் பங்கெடுக்க அழைப்புவிடுத்தார். முஸ்லிம் லீக் அவரது அழைப்பை ஏற்றாலும் ஜின்னா அமைச்சரவையில் பங்கெடுக்க மறுத்துவிட்டார்.

இடைக்கால அமைச்சரவை 1946 அக்டோபர் 26இல் மறுசீரமைக்கப்பட்டது. முஸ்லிம் லீக் சார்பில் பங்குபெற்றோர் லியாகத் அலி கான், … சுந்துரிகர், A.R. நிஷ்தர், கஸன்பர் அலி கான் மற்றும் ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் ஆவர்.

ஆனால் காங்கிரசிற்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான பகைமை குறையாமல் அது இடைக்கால அமைச்சரவைக் குழுவின் செயல்பாடுகளில் (உண்மையில் செயல்பாடற்ற நிலை) எதிரொலித்தது. லீக் அரசியல்சாசன சபையை உருவாக்க ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்து வந்தது. மற்றொருபுறம் நாடு கடுமையான இனக்கலவரத்தில் சிக்கிப் பெரும் வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கிழக்கு வங்காளத்தின் நவகாளி இனக்கலவரத்தால் சூறையாடப்பட்டிருந்தது. இடைக்கால அரசில் பங்கு பெற்ற லீக்கின் உறுப்பினர்கள் முறையான கூட்டம் துவங்குவதற்கு முன் நேரு அரசபிரதிநிதி முன்னிலையில் நடத்திய அலுவலகக் குறிப்புக்குட்படாத கலந்தாலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்தனர். இடைக்கால அரசின் செயல்பாடுகளை உள்ளிருந்து கெடுக்கும் நோக்கம் கொண்டது போன்றே முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகள் அமைந்தன.

காங்கிரஸ் ஜூலை – ஆகஸ்ட் 1946இல் நடந்த தேர்தலில் 210ற்கு 199 பொது இடங்களைப் பெற்றுப் பெரும் வெற்றியைக் குவித்தது போன்றே முஸ்லிம் லீக்கும் இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நன்கு வெற்றி பெற்றது. அதன் அணியில் 76 இடங்கள் இருந்தன. இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் ஒன்று நீங்கலாக 76 இடங்களை அது பெற்றிருந்தது. எனினும் சட்டசபையில் பங்கெடுப்பதைப் புறக்கணிக்க அது முடிவு செய்தது. ஆகவே 1946 டிசம்பர் 9இல் கூடிய முதல் சட்டசபையில் 207 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கிடையே காங்கிரசிற்கும் முஸ்லிம் லீக்கிற்கும் முற்றிக் கொண்டே போன பிணக்கின் விளைவாக இடைக்கால அரசு சுமூகமாக நடக்கமுடியாமல் தவித்தது. வேற்றுமைகளைக் களையும் பொருட்டு அரசபிரதிநிதியின் தலைமையில் நடத்தப்படும் அலுவலகக் குறிப்புக்குட்படாத கூட்டங்களைத் தொடக்கத்திலிருந்தே நடத்த முடியவில்லை .

இவையாவற்றுக்கும் உச்சமாக மார்ச் 1947இல் லியாகத் அலி கான் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை அமைந்தது. தொழிற்சாலைகள் மீதும், தொழில்கள் மீதும் அடுக்கடுக்காகப் பல வரிகளைச் சுமத்திய நிதியமைச்சர் ஒரு ஆணையத்தின் மூலம் 150 பெரும் வர்த்தக அமைப்புகளின் செயல்பாடுகளையும் அவைகளின் மீது இருந்த வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க நிர்பந்தித்தார். கான், அவரது அறிக்கையை சோஷலிஸ நிதிநிலை அறிக்கை என்று வர்ணித்தார். இவரின் இந்த நடவடிக்கை காங்கிரஸை ஆதரித்த பெரும் வர்த்தகர்களை நேரடியாகக் குறிவைப்பதாகவே இருந்தது. அவரது நோக்கம் தெளிவானது: இந்தியப் பிரிவினையை ஏற்படுத்தத் தளம் அமைக்கும் விதமாக காங்கிரசும், லீக்கும் ஒன்றிணைந்த செயல்பாட்டின் மூலம் தேசம் விடுதலை பெறமுடியாது என்பதை உணரவைப்பதே அதுவாகும்.

பிரிட்டிஷ் பிரதமரான அட்லி 1947 பிப்ரவரி 20இல் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுக்கு வழி ஏற்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் ஜூன் 1948வாக்கில் அந்நாட்டைவிட்டு வெளியேறுவதில் தீர்மானமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. வேவல் பிரபு 1947 மார்ச் 22இல் அரசபிரதிநிதி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு மௌண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார்.

மௌண்ட்பேட்டன் திட்டம்

மௌண்ட்பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார் அதன்படி பஞ்சாபை மேற்கு – கிழக்காகப் பிரிப்பதும் (மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்கு மௌண்ட்பேட்டன் பிரபு வழங்கப்படும்), அது போன்றே வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை இந்தியா வைத்துக்கொள்ளவும் கிழக்குப்பகுதியைப் பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன. காங்கிரஸ் செயற்குழு 1947 மே 1இல் இந்திய பிரிவினைத் திட்டத்திற்கு உடன்படுவதாக மௌண்ட்பேட்டனிடம் தெரிவித்தது. இதையடுத்து லண்டன் சென்று திரும்பிய அரசபிரதிநிதி இந்திய பிரிவினைக்கான வரைவை வெளியிட்டதோடு பிரிட்டிஷார் குறித்த தேதிக்கு முன்பாகவே 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியாவைவிட்டு மொத்தத்தில் விலக விரும்புவதாகத் தெரிவித்தார். அவர் அறிவித்த அன்றிலிருந்து 11 வாரங்களே இந்திய விடுதலைக்கு எஞ்சியிருந்தது. அனைத்திந்தியக் காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15இல் கூடிய போது கோவிந்த் பல்லப் பந்த் இந்தியப் பிரிவினைக்கான தீர்மானத்தை முன்னெடுக்க அது நிறைவேற்றப்பட்டது. நேரு, படேல் போன்றவர்களின் அதிகாரமட்ட வலியுறுத்தும் திறனும், காந்தியடிகளின் தார்மீக சக்தியுமே அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் அத்தீர்மானம் வெற்றி பெறகாரணிகளாக அமைந்தன.

பல கொந்தளிப்பான சம்பவங்கள் மார்ச் 1946லிருந்து 1947 ஆகஸ்ட் 15 வரையிலான காலத்தில் நடந்தேறியதில் 1) அமைச்சரவைத் தூதுக்குழு நியமிக்கப்பட்டமை , 2) இடைக்கால அரசின் உருவாக்கம், 3) சட்டமன்றத்தின் தோற்றம், 4) காங்கிரசிற்கும், முஸ்லிம் லீக்கிற்குமிடையே ஏற்பட்ட பிளவு நாட்டின் பிரிவினைக்கும் இறுதியாக விடுதலைக்கும் இட்டுச்சென்றமை, போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *