தமிழக அரசியல் வரலாறு

இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடானது, ஆரோக்கியமான நிர்வாக மற்றும் அரசியல் பண்பாடும், கிட்டத்தட்ட நிலையான பொருளாதார வாழ்வு மற்றும் மிக தொன்மையான காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்ச்சியான மரபுகளையும் கொண்டதாகும். தென்னிந்தியாவின் சென்னை மாகாணம் என்பது (The Madras presidency) ஆங்கிலேயரின் அரசியல், நிர்வாகத் தேவைகளுக்காக தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணம் கி. பி. (பொ.ஆ) 1801-இல் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணமானது, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் தற்பொழுதுள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதி, தெற்கு கர்நாடகா, ஒடிசாவின் வடபகுதி முழுவதும் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பிரதேசம் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகளாகும்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சென்னை மாகாணத்தின் அரசியலானது பிராமணர் -பிராமணரல்லாதோரின் மோதல் தொடர்பான ஆதிக்கம் கொண்டதாக இருந்தது. அறிஞர்களும், அரசியல் சிந்தனையாளர்களும் இந்த பிராமணர் – பிராமணரல்லாதோர் என்ற இரு பிரிவினரிடையே உள்ள மோதல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பதுதான் தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை புரிந்து கொள்வதற்கு அவசியமானது என்று நம்பினார்கள்.

சென்னை மாகாணம்

அதே நேரத்தில், சில பிராமணரல்லாத சாதி குழுக்களின் உறுப்பினர்கள் தொழிற்துறை வாணிபம் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை கோரினர். கணிசமான அளவிற்கு, பிராமணரல்லாத சாதிபிரிவினர்கள் கிராமப் புறங்களில் இருந்து மாகாணத்தின் நகர்புறத்திற்கு புலம்பெயர்ந்தனர்,

அவர்கள் தங்களின் அடையாளத்தை உறுதி செய்ய விரும்பினார்கள் மற்றும் படிப்படியாக சமூகத்தில், அரசியலில், நிர்வாகத்தில் பிராமணர்கள் அனுபவித்த ஏகபோக அதிகாரம் மற்றும் தனி உரிமை சலுகைகளை சவாலாக நின்று எதிர்த்தனர்.

“திராவிடன்” என்ற வார்த்தை, அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர்/ ஆரியரல்லாத தமிழ்பேசுவோரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பிராமணர்கள் “ஆரியர்கள்” எனவும் வடமொழி நாகரிகத்தின் பாதுகாவலர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டனர் மற்றும் பிராமணரல்லாதோர் “திராவிடர்கள்” எனவும் அவர்கள் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் நாகரீகத்தின் பாதுகாவலர் எனவும் கருதப்பட்டனர்.

திராவிட இயக்கத்தின் தோற்றம்

சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதோரின் தமிழ் அடையாளம், சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பிற்காக ஓர் பிராமணரல்லாத குழுவால் துவங்கப்பட்டதே “திராவிட இயக்கமாகும்.”

திராவிடர்கள் மற்றும் பிராமணரல்லாதோர்

1801 ஆம் ஆண்டு பன்மொழி கொண்ட சென்னை மாகாணமானது (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துலு) காலனிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது. இந்தியாவினுடைய பன்மைத் தன்மையை சென்னை மாகாணத்தின் அரசியல் வளர்ச்சியில் காணமுடியும். வங்காளத்திலும், வடஇந்தியாவின் பிற பகுகளிலும் சமஸ்கிருதம் மற்றும் வேதங்களை மையப்படுத்திய இந்திய பண்பாடு முன் எடுக்கப்பட்டது. இவற்றோடு இந்தோ – ஆரிய (அ) இந்தோ – ஜெர்மன் மொழிக் குடும்பம் அங்கீகரிக்கப்பட்டது. வேதமல்லாத, சமஸ்கிருதம் அல்லாத பண்பாடு அங்கீகரிக்கப்படவில்லை.

பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். (1777-1819) இவர் சென்னை ராஜதானி கிழக்கிந்தியக் கம்பனி அரசின் சிறப்பான ஓர் அதிகாரி ஆவார். 1810இல் (மதராஸ்) சென்னை கலெக்டரானார். 1812இல் “புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரி” யை நிறுவினார்.கம்பனி அலுவலர்களுக்கு உள்ளூர் (தென்னிந்திய) மொழிகளில் பயிற்சி அளிப்பதற்காக இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது. |அத்துடன் அம்மொழிகளின் இலக்கிய இலக்கண ஆய்வுகளும் மேற்கொள்ளப் பட்டன. எல்லிஸ் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றவர். திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அறத்துப்பாலின் 18 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அலெக்ஸாண்டர் டங்கன் காம்பெல் அவர்களது “தெலுங்கு இலக்கணம்” என்றநூலுக்குஎல்லிஸ் எழுதிய முன்னுரையில் தென்னிந்திய மொழிகளின் “திராவிடச் சான்று” என்பதனை விளக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய |தென்னிந்திய மொழிகள், சமஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்றும், அவற்றை திராவிட மொழிக் குடும்பம் என வகைப்படுத்தலாம் என்றும் விளக்கியிருந்தார். தொன்மையான தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தியலை முதன்முதலில் வெளியிட்டவர் எல்லிஸ் ஆவார். அதனால்தான் அவரை “தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி” என அயோத்திதாசர் பாராட்டினார்.

இராபர்ட் கால்டுவெல் (1814-1891) கிறிஸ்தவ மதபோதகரான இவர், 1838 இல் சமயப் பணிக்காக திருநெல்வேலி (இடையான்குடி) பகுதியை வந்தடைந்தார். சமயப்பணியுடன் கல்விப் பணி மற்றும் மொழி ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். அவரது புகழ்பெற்ற ஆய்வு நூலான “திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” 1856 இல் வெளியிடப்பட்டது. அதன் வாயிலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத மொழி குடும்பத்தைச் சேராதவை, திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்தக் கூடியவை என்பதை தகுந்த சான்றுகளுடன் நிறுவினார் . அவற்றில் தமிழ் மிகத் தொன்மையானது என்றும், மிகத் தொன்மையான கிறிஸ்துவ மறைநூற்களில் கூட தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். 1816இல் எல்லிஸ் அவர்களால் முன்மொழியப்பட்ட “திராவிட மொழிக் குடும்பம்” என்கிற கருத்தியலை 1856இல் ஒப்பிலக்கணம் மூலம் உறுதிப்படுத்தியவர் கால்டுவெல் ஆவார். அவரது மனைவியார் எலிஸா மால்ட் அவர்களும் இப்பகுதியில் மகளிர் கல்விக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளார். கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தனித்துவத்தையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் விதமாக அமைத்தன.

1837 ஆம் ஆண்டு மற்றும் இதர ஆய்வாளர்களால் பிராமண மூல ஆவணங்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வுகள் (எல்ஸிஸ் 1816 மற்றும் கால்டுவெல் 1856) போன்றவைகள் இந்திய கலாச்சாரம் என்பது ஒரே மாதிரியானத் தன்மையைக் கொண்டது அல்ல என்றும், புத்த, திராவிட மரபுகள் கூட இந்தியாவில் இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது. தென்னிந்தியாவில், குறிப்பாக, பன்மொழி கொண்ட சென்னை மாகாணத்தில், பிராமணரல்லாதோர் இடத்தில், திராவிட மொழிக்குழுக்கள் மற்றும் திராவிட பண்பாட்டுத் தொன்மை ஆகியவை, திராவிட அடையாள எழுச்சிக்கு இட்டு சென்றது.

(1) பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது தங்களது மேன்மையை கோருவது மற்றும் (2) பிராமணர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏகபோகமாக்கியது ஆகிய இரண்டு திராவிட அடையாளத்தை பிராமணரல்லாதோர் அடையாளமாக மாற்றியமைத்தது. மகாராஷ்டிராவில் கூட மகாத்மா ஜோதிபா புலே இதே போன்று ஓர் பிராமணரல்லாதோர் இயக்கத்தைத் துவக்கினார் இவ்வாறு திராவிடம் என்பது தென்னிந்தியாவில் பிராமணரல்லாதோர் என்பதைக் குறிப்பதாயிற்று.

சென்னை மாகாண பிராமணரல்லாதோரின் பிரச்சனையை புதியதாக தேசியத் தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதாகக் குறைபாடு இருந்தது. 1852 ஆம் ஆண்டு கஜீலு லட்சுமி நரசு செட்டி என்பவர் இதனை வெளிப்படுத்தி, ஆங்கிலேய இந்திய கழகத்திலிருந்து வெளியேறி, சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கினார். சிப்பாய்க் கலகத்திற்கு பிந்தைய காலங்களில் பிராமணரல்லாத தலைவர்கள் அரசியல் சீர்திருத்தங்களைக் காட்டிலும் சமூக சீர்திருத்தத்தின் மீது கவனம் செலுத்தினார். 1909 ஆம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணத்தைச் சார்ந்த பிராமணரல்லாதோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று எதிர்ப்பு காட்ட துவங்கினர்.

1913 ஆம் ஆண்டு ஆளுனரின் செயற்குழு உறுப்பினர், திரு. சர். அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ் என்பவர் அளித்த புள்ளியியல் விவரமானது, மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டும் அங்கம் வகிக்கும் பிராமணர்கள் அனைத்து வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டார்கள் என்பதை நிரூபித்தார்.

நீதிக் கட்சி

அக்காலத்தில் இருந்த முதன்மையான அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசானது பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே பிராமணரல்லாத உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. எனவே சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணர் அல்லாத தலைவர்கள் பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பு ஒன்றினை துவங்க நினைத்தனர். முதலாவது உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவனங்களில் பிரதிநிதியாகும் வாய்ப்பு போன்றவை இவர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தன.

1916 ஆம் ஆண்டு டாக்டர். டி.எம். நாயர், சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர். சி. நடேசனார் போன்றோர்கள் பிராமணரல்லாதோரின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை முன்னேற்றுவதற்காக தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவினர். இவ்வாறு உருவான பின்னர் தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு (SILF) புகழ் பெற்ற நீதிக்கட்சியானது. “நீதிக்கட்சி” என்ற பெயர் ஆங்கில இதழான “நீதி” என்பதன் அடிப்படையில் பெயரிடப்பட்டது. இவர்களின் ஓயாத முயற்சியால் பிராமணரல்லாதோருக்கு மாகாண சட்டமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தனர்.

நீதிக் கட்சியின் முக்கிய நோக்கங்கள்

அ. தென்னிந்தியாவின் அனைத்து பிராமணரல்லாதோரின் கல்வி, சமூக, பொருளாதார மற்றும் செல்வ மேம்பாட்டினை உருவாக்கி முன்னேற்றுதல்.
ஆ. அரசமைப்பிலான அரசாங்கத்தைக் கொண்டு பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்.
இ. அரசமைப்பிலான உண்மையான பிரதிநிதித்துவ அரசாங்கமாக ஆக்குதல்
ஈ. பிராமணரல்லாதோரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குதல்.

1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போஃர்டு சீர்திருத்தமானது மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்ததன் மூலம் சில துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அமைச்சருக்கு என ஒதுக்கப்பட்டது. இரட்டை ஆட்சியின் கீழ் 1920 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமையின் ஒரு பகுதியாக தேர்தலை புறக்கணித்தது. ஆனால் பல்வேறு அடையாளங்களில் காங்கிரசைச் சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிட்டனர்.

நீதிக் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்திற்கு எ. சுப்பராயலு முதலமைச்சரானார், அவரின் இறப்பிற்கு பிறகு பனகல் ராஜா 1921-ல் முதலமைச்சரானார்.

நீதிக் கட்சியின் பங்களிப்பு

அடுத்தடுத்த தேர்தல்களில் நல்வாய்ப்புகளில் பல்வேறு ஏற்ற இறக்கம் இருந்த போதிலும் நீதிக் கட்சி 1921 முதல் 1937 வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது. அவர்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்கள். வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்கள் சூத்திரர்களுக்கு மற்றும் பஞ்சமர்களுக்கு எதிராக இருந்த பொது வழி, போக்குவரத்து, உணவு விடுதிகள் மற்றும் பொது கிணறுகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இருந்த பாகுபாடுகளை நீக்கினர். இந்து சமய அறநிலைய வாரியத்தை அமைத்ததின் மூலம் ஆலய விவகாரங்களை ஒழுங்குபடுத்தினர். பஞ்சமர்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர் (பஞ்சமி நிலம்) புதிய நகரங்களையும், தொழிற்பேட்டைகளையும் அறிமுகப்படுத்தினர். ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு சிறப்பு முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் சில பள்ளிகளில் “மதிய உணவு திட்டத்தை” பரிசோதனை முறையில் கொண்டு வந்தனர். மருத்துவ கல்விக்கு சமஸ்கிருத அறிவு அடிப்படைத் தகுதி என்பது நீக்கப்பட்டு பிராமணரல்லாத மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு வழி செய்யப்பட்டது. டாக்டர். முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதுடன், பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர்.

கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்பட்டன. மிராசுதார் முறை ஒழிக்கப்பட்டதுடன் மற்றும் 1923 ஆம் ஆண்டு நீர்ப் பாசனத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் இந்த ஆட்சிக்காலத்தில் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. சில துறைகள் ஒதுக்கப்பட்டாலும் நீதிக் கட்சி மட்டுமே மிகவும் சிறப்பான அரசாங்கத்தை கொடுத்தது.

பெரியார் .வெ.ராமசாமி

ராஜாஜி அரசாங்கம் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது என முடிவெடுத்ததை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து “வட இந்திய ஏகாதிபத்தியத்தை” நிறுவும் முயற்சி என பெரியார் கருதினார். மேலும் இந்தி திணிப்பு என்பது திராவிடர்களை அடிமைப்படுத்தி ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான முயற்சி என்று பெரியார் கூறினார்.

சென்னை மாகாணத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றதன் விளைவாக மாகாண அரசாங்கத்தால் பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். பதினைந்து ஆண்டுகளில் இருபத்து மூன்று முறை சிறை சென்றார் என்பதனால் ‘சிறைப்பறவை’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார். 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு நீதிக் கட்சியானது ஆங்கிலேய அரசாங்கத்தின் கீழ் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியதுடன் இது ஆங்கிலேய அரசாங்கத்தின் இந்தியாவிற்கான அமைச்சருடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்றது. சென்னை மாகாண காங்கிரசில் பெரியார் முன்னோடியாக இருந்ததால் அரசியல் அரங்கில் பிராமணரல்லாதோர் அரசியலில் பங்குபெறுவதற்கான விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்குச் சாதகமாக காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்ததில் மிகச் சிறப்பாக தனது முயற்சியை செய்தார். வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு தனது சிறப்பான தலைமையை அளித்ததுடன் காங்கிரஸ் கட்சி நிறுவிய சேரன்மா தேவி குருகுலத்தில் நடந்த சாதிப்பாகுபாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

பெரியார் தன்னுடைய திட்டங்களை காங்கிரசு கட்சி ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தபோது காங்கிரசை விட்டு விலகி 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் தேர்தல் அரசியலை தவிர்த்ததுடன் சமூக சீர்திருத்தம், சாதிமுறையை ஒழிப்பது, மாண்பற்ற தன்மையை நீக்குவது, பெண்கள் மீதான பாலின அடிப்படையிலான தடை நீக்கம், பரம்பரை அர்ச்சகர் உரிமையை எதிர்ப்பது போன்றவற்றிற்காக பிரச்சாரம் செய்தது. சுயமரியாதை இயக்கம் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு பழங்காலம் முதலான மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் எதிர்த்ததுடன் பகுத்தறிவற்ற மரபுகள் மற்றும் சமத்துவமற்ற தன்மைகள் நீடித்திருப்பதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தின் பங்குப்பற்றியும் வினா எழுப்பியது. இந்த சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு மாண்பு மறுப்பினை எதிர்த்தல் மற்றும் தனிமனித சமத்துவம் (பெண்கள் உட்பட) போன்றவை மரபு மற்றும் மதத்தின் கோரப்பிடியின் கீழ் இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது.

சுயமரியாதை இயக்கம் அதன் இயக்க உறுப்பினர்களுக்கு சாதி துணைப்பெயர்களை துறப்பதுடன், சாதி-மத அடையாளங்களையும் கைவிட ஆணையிட்டது. அது சாதியற்ற, புரோகிதர்அற்ற, சம்பிரதாய சடங்குகள் அற்ற ஒப்பந்தத் திருமணங்களை அறிமுகம் செய்தது. இது சுயமரியாதைத் திருமணம் எனப்பட்டது. இவ்வியக்கம் தீண்டாமைக்கு எதிராக மட்டும் போராடவில்லை, மாறாக சாதிமுறை அமைப்பு மற்றும் சாதி அடிப்படையிலான பலவீனங்கள், தனிமனிதர்கள் மீது திணிக்கப்படும் மாண்பு குறைவு நடவடிக்கைகள் ஆகியவற்றினையும் எதிர்த்து போராடியது.

சுயமரியாதை இயக்கம் வெறும் பெயருக்காக மட்டும் பெண்ணுரிமை பற்றி பேசவில்லை. அது பெண்களின் சம உரிமை, சமநிலை மற்றும் சமவாய்ப்புக்காக பிரச்சாரம் செய்தது. பெண் விடுதலையில் சுயமரியாதை இயக்கத்தின் பங்குப்பணி ஓர் ஈடு இணையில்லாதது, என்பதால் அதன் காரணமாகவே பெண்கள் மாநாட்டில் ஈ.வெ. ராமசாமிக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பெரியாரின் நாளேடுகளான “குடியரசு,” ” புரட்சி”, பின்பு ‘விடுதலை’ போன்றவை சுயமரியாதைக் கருத்துக்களை சிறப்பான முறையில் பிரச்சாரம் செய்தன.

சுயமரியாதை இயக்கம்

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்தது. 1937ஆம் ஆண்டு ராஜாஜி என்று புகழ்பெற்ற C.ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் வழிநடத்தப்பட்ட காங்கிரசு கட்சி ஓரிடத்தை தவிர அனைத்து இடங்களிலும் வெற்றிப் பெற்றது. ஆனால் காங்கிரசு கட்சியின் வெற்றியானது நீதிக்கட்சியின் வீழ்ச்சினால் கிடைத்ததாகும். காங்கிரசு அரசாங்கம் அமைக்கப்பட்டு, சென்னை மாகாணத்தின் முதன்மை அமைச்சராக ராஜாஜி ஆனார்.

அதிகாரத்திற்கு வந்த உடனே காங்கிரசு அரசாங்கம் பள்ளிக் கூடங்களில் இந்தியினை கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்தியது. பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கினார். இக்கால கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சி (முன்னதாக 1925-இல் உருவாக்கப்பட்டது) சமதர்மத்திட்டங்களுக்காக தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்து தீவிரமாக பரப்புரை செய்து கொண்டிருந்தது. M. சிங்காரவேலர் மற்றும் அவரின் உடன் இருந்தோர் சுயமரியாதை இயக்கத்தின் சமூக சீர்திருத்த திட்டங்களால் கவரப்பட்டனர். இதன்படி சமூகங்களின் பொருளாதார திட்டங்களுக்கான ஆதரவை விரிவுபடுத்துபடுவதுடன், ஓர் பொதுத் திட்டத்தின் அடிப்படையில் செயலாற்ற ஒத்துக்கொண்டனர். (ஈரோடு திட்டம்). 

சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள்

அ. திராவிட சமுதாயத்தை சீர்திருத்துவது மற்றும் அதனை உண்மையான பகுத்தறிவுடையதாக்குதல்.
ஆ. திராவிடர்களின் பண்டைய தமிழ் பண்பாட்டினை அவர்களுக்குக் கற்பித்தல்.
இ. ஆரிய பண்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்து திராவிட சமூகத்தைக் காப்பாற்றுதல்
ஈ. மூடநம்பிக்கையான நடவடிக்கைகளை நீக்குவதன் மூலம் இந்து மதத்தை சீர்திருத்துவதுடன் பிராமணர்களின் செல்வாக்கினைக் குறைத்தல். 

பெரியார் பொதுவாக பிராமணரல்லாதவர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொன்மையான திராவிட பண்பாட்டின் புகழை மீட்டெடுக்க விரும்பினார். பிராமண புரோகிதர்கள் இல்லாத சுயமரியாதைத் திருமணத்தை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்தார். அவர் மத விழாக்களை மக்கள் பின்பற்றுவதை ஆதரிக்கவில்லை . எந்த ஒரு சமூக நிகழ்வுகளிலும் பிராமணர்களின் சேவைகளை பயன்படுத்தாமல் இருக்கச் செய்தார். 

நீதிக் கட்சியின் வீழ்ச்சி

1929- ஆம் ஆண்டு வரை சுயமரியாதை இயக்கமானது சென்னை மாகாணத்தில் ஓர் முன்னோடி இயக்கமாக இருந்தது. 1930 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் அதன் புகழ் மங்கத் தொடங்கியது. இந்த வீழ்ச்சிக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, இந்த இயக்கமானது ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவு மக்களிடையே ஆதரவை இழந்தது. இரண்டாவதாக, பெரியார் தலைமையில் இருந்த சுயமரியாதை இயக்கம் மிகவும் புரட்சிகரமான சீர்திருத்த இயக்கமானது. இறுதியாக உயர்குடியின மற்றும் ஆங்கில ஆதரவு கண்ணோட்டம் ஆகியவை பெருமளவு அதன் வீழ்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களித்தன.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

நீதிக் கட்சியின் வீழ்ச்சியும், தேர்தல் அரசியலில் நுழைய பெரியார் மறுத்ததும், வளர்ந்து வந்த மகாத்மா காந்தியின் புகழும், இந்திய தேசிய காங்கிரசை 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற செய்தது. ராஜாஜி முதல் அமைச்சரானார்.

அவர் முழுமையான மது விலக்கு (மது விற்கத் தடை) மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார். மேலும் ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டுவந்தார். இருந்தபோதிலும், இந்தி மொழியை கட்டாயமாக பள்ளியில் அறிமுகப்படுத்திய நடவடிக்கையானது பல பள்ளிக் கூடங்களை மூடுவதற்கு காரணமானது. இது சுயமரியாதைக்காரர்கள் மற்றும் தேசியவாதிகளான மறைமலை அடிகள் போன்றோரை ஆத்திரமடையச் செய்தது. இதனால் 1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பெரியார் உள்ளிட்ட ஆயிரக் கணக்காண போராட்டக்காரர்கள் கைதானார்கள், மேலும் பல பேர் சிறையிலேயே இறந்தனர். 

1944 – சேலம் மாநாடு

1944-ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற சேலம் மாநாட்டில், ஏற்கெனவே பெரியாரின் தளபதியாகிவிட்ட திறமையான சொற்பொழிவாளரான சி.என். அண்ணாதுரை நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் (தி.க) என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டுவந்தார். பெரியார் “திராவிட நாடு” மாநாட்டைக் கூட்டி திராவிடர்களுக்குத் தனி “திராவிட நாடு” கோரினார். மேலும் அவரின் புகழ் பெற்ற வாசகமான “திராவிட நாடு திராவிடர்களுக்கே” எனவும் முழக்கமிட்டார். தனி “திராவிட நாடு” கோரிக்கையைத் தவிர திராவிடர் கழகமானது சாதியற்ற சமூகத்தை ஏற்படுத்துதல், மதச் சடங்குகளைக் கண்டித்தல், பழமை மற்றும் மூடநம்பிக்கைகள் அற்ற சமூகத்தை அமைத்தல் ஆகியவற்றை விரும்பியது.
திராவிடர் கழகமானது கிராம மற்றும் நகர் புறங்களில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகவும் புகழ்பெற்றது, பல பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பெயர்களை தூய தமிழில் மாற்றி கொண்டனர். 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 1965

1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 313-ன் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளை தி.மு.க. துக்க தினமாக அனுசரிக்கத் தீர்மானித்தது. அதன் பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு பெருமளவிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்களைச் சந்தித்தது. இந்த கிளர்ச்சியால் தி.மு.க. மாணவர் சமூகத்திடம் இருந்து பெருமளவு ஆதரவை பெற்றது. இதன் மற்றொரு பக்கம் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில் தனது ஆதரவையும், தளத்தையும் இழந்தது. இதற்கிடையில் தி.மு.க. “திராவிட நாடு” கோரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டு தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் அரசியலில் ஊக்கத்துடன் பங்கெடுத்தது.

திராவிட இயக்கம்: இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதன் பின்னரும்

1939 ஆம் ஆண்டு இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்படுவதை விரும்பாத காங்கிரசு அமைச்சரவை பதவியை துறந்தது. பெரியார் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார்.

1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பெரியார் தலைமையிலான சேலம் மாநாட்டில் அதன் பெயரை “திராவிடர் கழகம்” என மாற்றியும், திராவிட நாடு அடைவதே தனது லட்சியம் என்றும் அறிவித்து, சமூக பண்பாட்டு சமத்துவத்திற்கு முன்பாக விடுதலை அடைவது தமிழர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறினார். 1949 ஆம் ஆண்டில், திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டது.

1951ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றமானது உயர்கல்வியில் சாதிவாரி இடஒதுக்கீட்டை உடைத்து எறிந்தது. உடனடியாக பெரியாரின் திராவிடர் கழகம் மீண்டும் சாதிவாரி இடஒதுக்கீட்டைத் திரும்ப பெற போராட்டத்தை துவக்கியது.

திராவிட முன்னேற்ற கழகமும் கூட இந்த போராட்ட இயக்கத்தில் சேர்ந்து கொண்டது. காங்கிரசு தலைவர் காமராஜர் இந்த சிக்கலை மத்தியில் இருக்கும் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனைத் தொடர்ந்து சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சாதகமாக இட ஒதுக்கீடு அளிக்கும் முதலாவது நாடாளுமன்ற சட்டத் திருத்தம் இயற்றப்பட்டது.

ராஜாஜி ஆட்சி: – (1952 – 54)

சென்னை மாகாண அரசியலானது குடியரசு இந்தியாவில் பழமை மாறா சக்திகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் போராட்டத்தின் சாட்சியாகவே இருந்தது. சென்னைமாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை வழிநடத்திய திரு. சி. ராஜகோபாலாச்சாரி, மீண்டும் குடியரசினுடைய அரசமைப்பின் கீழ் பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கையை குறைத்தார். பள்ளிகளில் இந்திய மொழியை திணித்தார், புதிய பள்ளிக் கூடங்களில் பகுதி நேரமாக கற்பதற்கு பரம்பரைத் தொழில் எனப்படும் (குலக்கல்வி) புதிய தொடக்க கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ராஜாஜியின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து திராவிடத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் போராடத் தொடங்கினார். காங்கிரசு தலைவர்களின் ஒரு பகுதியினரும் ராஜாஜியின் திட்டத்தால் கோபம் அடைந்தனர். இதுவே ராஜாஜி பதவி விலகுவதற்கு காரணமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து காமராஜர் முதலமைச்சரானார்.

காமராஜர் காலம் (1954 – 1963)

காமராஜர் தொடக்கக் கல்வித்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்தினார், பல அணைகளைக் கட்டி நீர்பாசன வசதியை உயர்த்தினார். நிறைய தொழிற்பேட்டைகளை (Industrial Estates) அமைத்தார். அதன் மூலம் மாநிலத்தில் வியக்கத்தக்க அளவிற்கு தொழில்வளர்ச்சியை உறுதி செய்தார். ஏழைகிராமபுற குழந்தைகளும் கல்வி பெறச் செய்தார். அவர் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

திராவிட கட்சிகளின் ஆட்சி

1967-ஆம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டது. தி.மு.க. வெற்றி பெற்று சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரானார். அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி, படியரிசி திட்டத்தின் மூலம் உணவு பாதுகாப்பிற்கு முன்னோடியாக இருந்தது மற்றும் குடிசை மாற்றுவாரியம் அமைத்தது போன்றவற்றால் நகர்புற ஏழை மக்களிடம் போதுமான அளவு அண்ணாவிற்கு ஆதரவு பெருகியது. மிகவும் முக்கியமாக 1969 ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரையின் தலைமையிலான அரசாங்கம் “மெட்ராஸ்” மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என பெயர்மாற்றம் செய்தது. அக்கட்சியின் இதர முக்கிய சாதனைகள். காமராஜர் ஓர் நிலையான ஆட்சியைத் தந்தார்.

1. 75 மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாக்கியது.
2. அனைத்து சாதி ஏழை மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு முந்தைய படிப்புகளுக்கு கல்வி கட்டண விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
3. இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.
4. தமிழக ஏழை மக்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா?

1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக சென்னை மாகாணத்தில் இருந்து மலையாளப் பகுதிகள் கேரளாவிற்கும், தெலுங்கு பகுதிகள் ஆந்திரப் பிரதேசத்திற்கும், கன்னடப் பகுதிகள் மைசூர் மாநிலத்திற்கும் தரப்பட்டது. இங்ஙனம் சென்னை மாகாணம் தமிழர்களின் மாநிலமாக உருவானது.

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட ஆட்சி

கடந்த 62 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. 1957-ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ததின் விளைவாகவும், புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதிகளை கடந்து வரவும், தனது “திராவிட நாடு” கோரிக்கையைக் கைவிட்டது. 1967-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அண்ணாதுரை சிறிது காலமே ஆட்சி புரிந்தார். (1967-1969), இருந்த போதிலும், சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்றும், திருமணச் சட்டத்தை இயற்றியது, மத்திய அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையை (ஆங்கிலம் மற்றும் தமிழ்) நடைமுறைப்படுத்தியது ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும்.

சி.என். அண்ணாதுரை முதன்முறையாக, மலிவு விலை அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். (படி அரிசி, ஒரு ரூபாய்) அவருக்கு பின் வந்த திரு. மு. கருணாநிதி அம்மரபினைத் தொடர்ந்தார்.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் தன்னுடைய திராவிட கட்சியை தொடங்கினார். (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – அ.இ.அ.தி.மு.க) 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை 1987-இல் தனது இறப்பு வரை தக்கவைத்துக் கொண்டார். அதன்பிறகு மு.கருணாநிதி தலைமையில் தி.மு.கவும் செல்வி. ஜெ. ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.கவும் அடுத்தடுத்த தேர்தல்களில் மாறிமாறி வெற்றி பெற்று அமைச்சரவையை ஏற்படுத்தினர். மேலும், இவை இரண்டோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போன்ற உடைப்பின் வழி திராவிட கட்சிகளும் சில இருக்கின்றன.

அறுபது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு திராவிட ஆட்சி பங்களித்துள்ளது. அவர்கள் தமிழ் மொழியின் நலன், தமிழக மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனை உறுதியுடன் பாதுகாத்தனர். சாதாரண மக்களின் துன்பங்களை போக்குவதற்காக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மலிவு விலையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. பின்னர் இலவச அரிசித்திட்டம், சத்துணவுத் திட்டம், பட்டபடிப்பு வரை இலவச கல்வி, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், “சைக்கிள் ரிக்க்ஷா ஒழிப்பு”, “கையால் மலம் அள்ளுவது ஒழிப்பு”, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான “தொட்டில் குழந்தை திட்டம்”, அமைப்பு சார பணியாளர்களுக்கு பல்வேறு நலவாரியங்கள், இன்னும் கூறினால் மாற்றுப்பாலினத்தவர் நலன் போன்றவற்றை உறுதி செய்தன. ஒருவரை ஒருவர் அழிக்கும் சாதி சண்டைக்கும் “சமத்துவபுரமும்”, “உழவர் சந்தையும்” உருவாக்கப்பட்டன.

குடிசைகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. குடிசைவாசிகளின் குடியிருப்புத் தேவைக்கு குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக வியக்கத்தக்க அளவு தொழில் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டது. இந்த வளர்ச்சியின் விளைவாக தமிழ்நாடு மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது. இன்று தமிழ்நாடு மோட்டார் வாகனத்தொழில், (தானியங்கி), மின்னணு, மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் முன்னணி நிலையில் இருக்கிறது. அதன் புதிய பொருளாதார மண்டல ங்கள் பெருமளவு முதலீடுகளை ஈர்த்துள்ளன. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சாதனைகள் அனைவராலும் புகழ்ந்து பேசப்படுகிறது. சாலைகள், துறைமுகங்கள், மின்சாரவசதி, திறன் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது போன்றவைகள் தொழில் வளர்ச்சியை எளிமைப்படுத்தியுள்ளன.

பல்வேறு வகைகளில் பன்மடங்கு பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் உயர்ந்துள்ளன. இங்கு பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவற்றுள் தனித்தன்மையான பல்கலைக் கழகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனியாகப் பெண்கள் பல்கலைக் கழகம் உள்ளதுடன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், சித்த மருத்துவம், விளையாட்டு போன்றவற்றிற்கும் தனியாகப் பல்கலைக்கழகம் உள்ளன. தமிழ்பல்கலைக்கழகம் மூலம் தமிழ்மொழி மேம்பாடு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்மாநாடு, செம்மொழி மாநாடு, எழுத்து சீர்திருத்தம் என தமிழ்மொழியை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கு நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

திராவிட கட்சிகள், அண்ணாதுரையின் காலத்தில் இருந்து மதச்சார்பற்ற தன்மை மாநில தன்னாட்சி போன்றவற்றிற்காகப் பாடுபட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகள் தேசிய அரசியலின் நீடித்த தன்மைக்குக் கூட பங்காற்றியிருக்கின்றன. தமிழகத்தில் திராவிட அரசியல் செல்வாக்கு தொடர்ந்து வல்லமை பெற்றதாக இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Price: ₹1,020.00

Buy Now Product Image

Based on School New Text Books

Price: ₹1,045.00

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Price: ₹1,068.00

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Price: ₹266.00

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Price: ₹246.00

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Price: ₹1,090.00

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Price: ₹800.00

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Price: ₹590.00

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

Price: ₹800.00