காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

அறிமுகம்

காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது. பிரிவினையின் போது திட்டமிடப்படவில்லை என்றாலும், இந்துக்கள் கிழக்கு வங்காளத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கும் இஸ்லாமியர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து கிழக்கு வங்காளத்திற்கும் இடம் பெயர் ஆரம்பித்தனர். இதேபோல், மேற்கு பஞ்சாபில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபிற்கும் கிழக்கு பஞ்சாபில் இருந்த முஸ்லிம்கள் மேற்கு பஞ்சாபிற்கும் குடிபெயர்ந்தனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்த கிராமங்கள் அவற்றில் வாழ்ந்த பெரும்பான்மை மதத்தினரைப் பொருத்துப் பிரிக்கப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் பாகிஸ்தானுக்கு எனப் பிரிக்கப்பட்டன; இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. அந்த கிராமங்களில் வாழ்ந்த சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில் அதாவது பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இந்துக்களும் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் சிறுபான்மையினராகவே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆறுகள் சாலைகள் மற்றும் மலைகள் ஆகியன எல்லை வகுப்பதில் முக்கிய அடையாளமாக கொள்ளப்பட்ட வேறு சில காரணிகள் ஆகும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆனால், பாகிஸ்தான் நிலப் பகுதியோடு தொடர்ச்சியாக அமையாத கிராமங்களும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த, ஆனால் இந்தியாவோடு நிலத்தொடர்ச்சியாக அமையாத கிராமங்களும் எந்த நாட்டோடு நிலத்தொடர்ச்சி உள்ளதோ அந்த நாட்டின் பகுதியாக இருந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. இந்த நேரத்தில் ஒரு புதிய சிக்கல் எழுந்தது. இது பஞ்சாபில் தனி மத அடையாளம் கொண்டிருந்த சீக்கியர் தொடர்பானது. பாகிஸ்தானின் பகுதியாக அமையவுள்ள கிராமங்களில் சீக்கிய மக்கள் வசித்த போதிலும் அகாலி தளம் இந்தியாவோடு இணைந்திருக்க விரும்புவதாக அறிவித்தது.

இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கு பிரிட்டன் எடுத்த விரைவான நடவடிக்கைகளின் போது இந்தியப் பிரிவினை சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி, 1947 பிப்ரவரி 20இல் லண்டனில் வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் 1948 ஜூன் 30க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் அளித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று தெரிவித்தார். 1947 மார்ச் 22இல் வேவல் பிரபுவுக்குப் பதிலாக அரச பிரதிநிதியாக பதவிக்கு வந்த மௌண்ட்பேட்டன் பிரபுவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத் துரிதப்படுத்தின. இந்த நிலையில், முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை பெரும்பகுதி முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைத் தன்கீழ் திரட்டியதன் மூலம், காங்கிரஸ் கட்சி அனைத்து இந்தியர்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கோரியதைத் தகர்க்க முயன்றது. 1947 ஜூன் 3இல் மௌண்ட்பேட்டன் பிரபு, அட்லி அறிவித்த தினத்திற்கு முன்னதாகவே 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். வகுப்புவாதப் பிரச்சனை, இருநாடு கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப்பதே மௌண்ட்பேட்டன் திட்டமாகும். முன்மொழியப்பட்டபடி, வங்காளம் மற்றும் பஞ்சாபை பிரிவினை செய்து பாகிஸ்தானை உருவாக்கும் இந்தியப் பிரிவினையை இறுதியாக காங்கிரஸ் சமரசத்துடன் ஏற்றுக்கொண்டது. 1947 ஜூன் 14இல் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடக்கத்தில் பிரிவினையை மிகத் தீவிரமாக எதிர்த்த காந்தியடிகள் அது தவிர்க்க முடியாததாகிவிட்டதை ஏற்றுக்கொண்டார். காந்தியடிகள் இந்த மாற்றத்தை விளக்கினார். பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஏற்பட்ட வன்முறைகளும் அதில் மக்களின் பங்கேற்பும் தன்னையும் காங்கிரசையும் பிரிவினையைத் தடுப்பதற்கான ஆற்றலற்றவர்களாக ஆக்கிவிட்டதாகத் தெரிவித்தார். துரதிர்ஷ்ட வசமாக, காலனியக் கூட்டாளிகள் உருவாக்கிய வகுப்புவாதமும் பிரிவினையும் புதிதாகப் பிறந்த குழந்தையான இந்திய தேசத்தைப் பெரிதும் பாதித்தது. 1948 ஜனவரி 30இல் நிகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் படுகொலை இதன் தொடக்கமாகும். புதிதாகப் பிறந்த குழந்தை நாடான நவீன இந்திய தேசம் இதன் சவால்களை தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை இந்தப் பாடத்தில் நாம் அறியலாம்.

ஜவகர்லால் நேரு 1947 ஆகஸ்டு 14-15 இடைப்பட்ட நாளன்று நள்ளிரவில் அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களிடம் உரையாற்றினார். அதில் அவர் சுதந்திர இந்தியாவிற்கான திட்டத்தையும் அதன் லட்சியங்களையும் குறிப்பிட்டதோடு அத்தகைய பாதையை தேர்ந்தெடுத்ததற்கான தவிர்க்க முடியாத காரணங்களையும் பொருத்தமாக விளக்கினார். “நீண்ட காலத்திற்கு முன்னர் நாம் விதியோடு ஓர் ஒப்பந்தம் செய்தோம். இப்போது அந்த வாக்குறுதிகளை முழுமையாக அல்லது முழு அளவில் ஆனால் மிகவும் கணிசமாக மீட்கும் நேரம் வந்துவிட்டது.” ஆசிரியர்கள் ஜவகர்லால் நேருவின் முழு உரையையும் மாணவர்களைக் கேட்கச் செய்யலாம்.

பிரிவினையின் விளைவுகள்

சுதந்திர இந்தியாவின் முன்னின்ற சவால்கள் பலவாகும். அவற்றுள் பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்வி முறையைச் சீரமைத்தல், (அடுத்த பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல், 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல், தேசிய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற , மக்களால் பேசப்படும் மொழிகள் அடிப்படையிலான வேறுபாட்டைத் தீர்த்து வைத்தல் போன்ற நாட்டின் தேவைகள் உள்ளடங்கும். மேலும், மக்களாட்சி , இறையாண்மை , சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.

முஸ்லிம் லீக், இந்து – முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை லாகூர் மாநாடு (மார்ச் 1940) முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்தக் கோரிக்கைக்கான வடிவமும் செயலாக்கமும் 1947 ஜூன் 3இல் வெளியிடப்பட்ட மௌண்ட்பேட்டன் திட்டத்தில் இடம் பெற்றது. மெளண்ட்பேட்டன் அதிகார மாற்றத்திற்கான நாளை ஆகஸ்ட் 15, 1947 என்று அறிவித்ததால், மௌண்ட்பேட்டன் திட்ட வெளியீடு, இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி வெறும் நாட்கள் மட்டுமே.

இந்திய வரைப்படத்தைப் பிரிவினைக்கேற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞரான சர் சிரில் ராட்க்ளிஃப் இந்தியாவைப் பற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாதவராகவும் இந்திய நிலைமை புரியாதவராகவும் இருந்தார். அவர் உருவாக்கிய வரைப்படத்தின் அடிப்படையில் எல்லைகளை வரையறுத்துக்கொள்ளும் பொறுப்பு 1947 ஆகஸ்ட் 15க்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் என்ற இரண்டு அரசமைப்பு நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

1947 ஜூலை 8இல் சர் சிரில் ராட்க்ளிஃப் இந்தியா வந்தடைந்தார். பஞ்சாப்-வங்காளம் ஆகிய இரண்டு எல்லை ஆணையங்களுக்கும் அவர் தலைமைப் பொறுப்பு வகித்தார். அவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில் முஸ்லிம் சமூகம் மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த தலா இரண்டு நீதியரசர்கள் இணைந்து பணியாற்றினர். இந்து மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினர் வாழும் கிராமங்களை 1941ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய எல்லை ஆணையத்திற்கு ஐந்து வார கால அவகாசம் மட்டுமே இருந்தது. 1941ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போரின் நடுவில் பரபரப்பாக நடத்தப்பட்டதால் பல தவறுகளை உள்ளடக்கியது என்ற கருத்து பரவலாக நிலவியது.

சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளின் காரணமாக மேற்கு பஞ்சாபில் இருந்த கிராமங்களைச் சேர்ந்த சீக்கியர்களின் மக்கள் தொகையைப் பொருட்படுத்தாமல் சீக்கிய குருத்துவாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கை மூலம் 1947 ஆகஸ்ட் 9இல் வெளியிட்டன. ராட்க்ளிஃப் எல்லைக்கோட்டின் அடிப்படையில் எல்லைகளை வரையறுக்கும் பணியைச் சுதந்திரம் வழங்கப்பட்டபின் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளலாம் என்று மௌண்ட்பேட்டன் தீர்மானித்தார். நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கான நில வரையறையோடு, 1947 ஆகஸ்ட் 14-15இல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இருநாட்டு மக்களுக்கும் அவர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாளில் புதிய வரைபட விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ராட்க்ளிஃப் அறிவிப்பு பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடு இணையும் என்ற தீர்மானத்தை பஞ்சாப் மாகாணச் சட்டமன்றம் நிறைவேற்றியது. பாகிஸ்தானோடு நிலத்தொடர்ச்சியைக் கொண்டிருந்த மாகாணங்களான சிந்து, பலுசிஸ்தான், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவையும் இதைப் பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றின. அதேபோல், வங்காள சட்டமன்றம் அந்த மாகாணத்தின் கிழக்குப்பகுதி பாகிஸ்தானில் சேரும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.

1947 ஆகஸ்ட் 9இல் ராட்க்ளிஃப் அளித்த திட்டத்தின்படி அதுவரையில் பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த 62,000 சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகை (1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 1.58 கோடியாகும். அவர்களில் 1.18 கோடி மக்கள் முஸ்லிம்கள் ஆவர். மேற்கு பஞ்சாபின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிம் அல்லாதோர் ஆவர். சர். ராட்கிளிஃப் செயல்படுத்திய மௌண்ட்பேட்டன் திட்டத்தின்படி அவர்கள் தொடர்ந்து பாகிஸ்தானின் சிறுபான்மையினராக இருப்பர். அதே போல் இந்தியாவின் பகுதியாக வரையறை செய்யப்பட்ட கிழக்கு பஞ்சாப் 37,000 சதுரடி நிலப்பரப்பும் 1.26 கோடி மக்கள் தொகையும் உடையதாக இருந்தது. இவர்களில் 43.75 இலட்சம் பேர் முஸ்லிம்கள் ஆவர். வேறுவிதமாக சொல்வதெனில் கிழக்கு பஞ்சாப் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் ஆவர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்த வங்காளப் பகுதியில் இனவாரியான மக்கள் தொகையும் சிக்கலாகவே இருந்தது. இந்தியாவின் பகுதியாக இருந்த மேற்கு வங்காளம் பரப்பளவில் 28,000 சதுரமைலுடன் 21,20,000 மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. அதில் 5,30,000 முஸ்லிம்கள் ஆவார். வேறுவிதமாக சொல்வதானால் பழைய வங்காள மாகாணத்தின் இந்தியப் பகுதி வங்காளத்தின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் கால் பகுதி (1/4 பங்கை ) கொண்டிருந்தது எனலாம். சர். ராட்கிளிஃப் ஆணையம் பழைய வங்காள மாநிலத்தின் 49,400 சதுரமைல்களும் 3,91,00,000 மக்கள் தொகை கொண்ட பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கியது. 1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 2,77,00,000 பேர் முஸ்லிம்கள் ஆவர். வேறுவிதமாக சொல்வதெனில் 29% பேர் இந்துக்கள். கிழக்குப் பாகிஸ்தான் (இதுவே 1971 டிசம்பரில் பங்களாதேஷ் ஆகியது) என்பது வங்காள மாகாணத்தின் பிரிக்கப்பட்ட கிழக்குப் பகுதி அஸ்ஸாமின் சில்கட் மாவட்டம், அப்பகுதியிலிருந்த குல்நா மாவட்டம், சிட்டகாங் குன்று பகுதி ஆகியவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்தச் செயல்திட்டம் சரியான மாதிரி இல்லாமல் உருவாக்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக வங்காளத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக இருந்த முர்ஸிதாபாத், மால்டா, நாடியா ஆகிய மாவட்டங்களை சர். ராட்கிளிஃப் இந்தியாவிற்கு வழங்கியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Partition: A poem by W.H. Auden

Unbiased at least he was when he arrived on his mission,

Having never set eyes on the land he was called to partition

Between two peoples fanatically at odds,

With their different diets and incompatible gods.

Time, they had briefed him in London, is short. It’s too late

For mutual reconciliation or rational debate:

The only solution now lies in separation.

The Viceroy thinks, as you will see from his letter,

That the less you are seen in his company the better,

So we’ve arranged to provide you with other accommodation.

We can give you four judges, two Moslem and two Hindu,

To consult with, but the final decision must rest with you.

Shut up in a lonely mansion, with police night and day

Patrolling the gardens to keep the assassins away,

He got down to work, to the task of settling the fate of millions.

The maps at his disposal were out of date

And the Census Returns almost certainly incorrect,

But there was no time to check them, no time to inspect Contested areas.

The weather was frightfully hot,

And a bout of dysentery kept him constantly on the trot,

But in seven weeks it was done, the frontiers decided,

A continent for better or worse divided.

The next day he sailed for England, where he could quickly forget

The case, as a good lawyer must. Return he would not,

Afraid, as he told his Club, that he might get shot.

பிரிவினை: W.H. ஆடன் எழுதிய கவிதை

எல்லை வகுக்க வந்தபோது ராட்கிளிஃப் நடுநிலைதான்

என்றாலும் அவருக்குப் புதிது இந்த நாட்டுநிலைதான்

வெறிகொண்ட இரு இனத்திற்குமிடையே விலகியது ஒற்றுமை

இவர்களின் இரையிலும், இறையிலும் எவ்வளவோ வேற்றுமை

பணியை முடிக்க இலண்டன் விதித்திருந்த காலமோ கொஞ்சம்

சமரச முயற்சிக்கும், விவாத பயிற்சிக்கும் அதில் நேரமெங்கே எஞ்சும் இப்போதைக்கு ஒரே வழி – அதுதான் “பிரிவினை” எனும் வலி

கோடுபோட வந்தவரிடமிருந்து கொஞ்சம் விலகி நிற்பதே உசிதம் என்றெண்ணிய வைஸ்ராயின் ஏற்பாடுகளை விளக்கி நிற்குது கடிதம்

இரு முஸ்லிம், இரு இந்து என நீதிபதிகள் நால்வர்

இவர் கேட்டால் தக்க ஆலோசனைகள் சொல்வர்

ராட்கிளிஃப் முடிவே இறுதி – அதன்படி எல்லைக்கோடு உறுதி

அவர் தனியாய் தங்கிய வீட்டில் இரவும் பகலும் போலீஸ் பாதுகாப்பு கொலைகாரர் நெருங்காமல் தோட்டமும், ஓட்டமுமாய் கண்காணிப்பு

அவர் வேலை செய்ய எழுந்தார் – மக்களின் விதியை எழுதத் துணிந்தார் காலாவதியான தோராய வரைபடம் – ஆராய நேரமில்லை ,

பாடாவதியான பழங்கணக்கெடுப்பு – சரிபார்க்க சமயமில்லை இடங்களுக்கோ போட்டி – வானிலையோ வதைத்தது வாட்டி

வேலை செய்ய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை

என்றாலும், ஏழு வாரத்தில் வகுத்திட்டார் எல்லை

இங்கிருந்து இங்கிலாந்திற்கு அடுத்த நாள் கப்பலில் பயணமானார்

இங்கே நடந்ததை, அதைவிட வேகமாய் மறந்து போனார்

முடிந்த வழக்கை மறப்பதுதானே வழக்கறிஞர் வழக்கம்.

நன்றோ! தீதோ! பிரித்திட்டார் இந்தியத் துணைக் கண்டத்தை அன்று. திரும்பிய பின் இங்கிலாந்து நண்பர்களிடம் சொல்லியது உண்டு

மீண்டும் இந்தியா சென்றால் தனக்குத் துப்பாக்கியில் கண்டம் என்று.

வரலாற்று அறிஞர் ஞானேந்திர பாண்டே கூற்றுப்படி, 1947-48இல் 5 இலட்சம் முஸ்லிம் அல்லாத அகதிகள் (இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்) பஞ்சாப் மற்றும் தில்லிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தில்லியில் வசித்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அவர்களது வீடுகளிலிருந்து காலி செய்யப்பட்டனர். வன்முறைக் கும்பலின் தாக்குதலிலிருந்து தப்ப செங்கோட்டை மற்றும் புராணஹிலா கோட்டைகளிலிருந்த முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றில் போதுமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை . 

காலனி ஆட்சியாளர்கள் இந்திய வரைபடத்தை மறுவரைவு செய்து இரண்டு சுதந்திர அரசாங்கங்களை விட்டுச் சென்றனர். சரியான எல்லைகளைத் அவர்களே வகுத்துக்கொள்ளும்படி அந்த இரு அரசாங்கங்களிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இரு நாடுகளிலும் (கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இந்தியர்கள்; மேற்கு வங்காளம், கிழக்கு பஞ்சாப், ஐக்கிய மாகாணம் ஆகியவற்றில் முஸ்லிம்கள்) வாழ்ந்த சமயச் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் தொடர்ந்து சமயச் சிறுபான்மையினராகவும் குடிமக்களாகவும் வாழவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்தியா பிரிவினை செய்யப்பட்டது.

பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாதோரும் (இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள்) இருந்தனர். இந்து – முஸ்லிம் வன்முறைக்கு இடையே ஏற்பட்ட உயிர்க் கொலைகள், அதிகாரப் பரிமாற்றம் எதிர்பார்த்தது போல் மென்மையாக நடைபெறாது என்பதை உணர்த்தியது. இந்திய இராயல் கப்பற்படைக்கலகம், ஐ.என்.ஏ. வழக்குகள் (முந்தைய பாடத்தைப்பார்க்கவும்) ஆகியவற்றின் போது நிலவிய இந்து – முஸ்லிம் ஒற்றுமை தற்போது குலைந்து வெடிக்கும் எரிமலை போல் மாறியிருந்தது. வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவெங்கும் நடைபெற்றன. குறிப்பாக, வங்காளம் மற்றும் பஞ்சாபில் அவை அதிகமாக இருந்தன.

இரண்டு தேசங்கள் உருவான பின்னும் பிரிந்தப்பகுதிகள் இரு பக்கமும் வாழ்ந்த சிறுபான்மையின மக்களை பயமும் பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன. இந்திய விடுதலைப் போரட்டத்தை முன்னின்று வழி நடத்தியவரும் காலனிய ஆட்சியாளர்களால் புறக்கணிக்க இயலாதவருமான காந்தியடிகள் இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்டு 15 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புது தில்லிக்கு வெகுதொலைவில் உண்ணாவிரதம் இருந்தார். பிரிவினை ஏற்படுத்திய அச்சம் இரு பக்கத்திலும் இருந்த சிறுபான்மையினரை மறுபக்கத்திற்கு குடிபெயராலாமா என்று பயத்தோடு எண்ண வைத்தது.

வன்முறை பரவியபோது காவல்துறை வேடிக்கை பார்த்தது. இது இரு தேச சிறுபான்மையினரிடமும் இடம்பெயரும் எண்ண த்தை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் 4.5 மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் குறிப்பாக கிழக்கு பஞ்சாப்நகரங்கள் மற்றும் புது தில்லிக்கு இடம் பெயர்ந்தனர். அதே நேரத்தில், 5.5 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கள் வீட்டை விட்டு (கிழக்கு பஞ்சாப் ஐக்கிய மாகாணம் மற்றும் தில்லி ஆகியவற்றிலிருந்து) இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்றனர். நிலைமை சீரான பின் மீண்டும் தங்களது இடங்களுக்கே திரும்பி விடலாம் என்று நினைத்த மக்களும் பின்னால் திரும்ப முடியவில்லை . வங்காளத்தில் இரண்டு எல்லைகளிலும் கூட இந்த இடம்பெயர்வு நடைபெற்றது.

இரண்டு நாடுகளிலும் குடிபெயர்ந்த குடும்பங்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. எல்லையைக் கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை கஃபிலா (Kafila) எனப்பட்டது. நடந்து சென்ற அகதிகள் மாற்று வகுப்பைச் சார்ந்த வன்முறைக் கும்பலின் பழிவாங்கலுக்கு இலக்காயினர். பஞ்சாப்பின் புதிய எல்லையின் இருபுறத்திலும் ஓடிய இரயில்களில் பயணம் செய்தோர் கொலைகார கும்பலின் வெறிக்குப் பலியாயினர். வன்முறையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலாக இருக்க வேண்டும் என்றும் 15 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1950இல் கூட இருநாடுகளின் அரசியல் தலைமைகளும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்றும் தங்கள் வீடுகளைத் துறந்து வந்த இரு பக்கத்தினரும் அவர்கள் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டுமென்றும் விரும்பினர். 1950, ஏப்ரல் 8இல் நேரு மற்றும் லியாகத் அலி கான் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் இரு தரப்பிலும் உள்ள சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிட்டது. ஆனால், அதற்கேற்றாற்போல் நிலைமை சுமூகமாக இல்லை. ஒப்பந்தம் கையெழுத்தான போதே மேற்கு பஞ்சாபிலிருந்து சென்றவர்களை கிழக்கு பஞ்சாபிலும், தில்லியிலும் தங்க வைத்து மறுவாழ்வு அளிப்பதற்கும் தொழிற்திறன் பயிற்சி அளிப்பதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. பிரிவினையின் போதான வன்முறை ஏற்படுத்திய காயங்கள் பல பதிற்றாண்டுகள் கழிந்தும் ஆறவில்லை . பல்வேறு இலக்கியப் படைப்புகள் பிரிவினை அதிர்ச்சியை விளக்கும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன.

நேருவுக்கும் இந்த தேசத்தின் அடிப்படைச் சட்டத்தை உருவாக்குவதில் முனைந்திருந்த அரசமைப்பு நிர்ணய சபைக்கும் பிரிவினை பெரும் சவாலாக நின்றது. பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசாக முடிவெடுத்த நிலையில் இந்தியா சமயச்சார்பற்ற மக்களாட்சிக் குடியரசுக்கான அரசமைப்பை உருவாக்கியது.

அரசமைப்பு உருவாக்கம்

இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும்; பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக 1934இல் அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது. காலனிய அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையைக் காங்கிரஸ் புறக்கணித்தது. இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்ற அடிப்படைக் கருத்து 1922லேயே காந்தியடிகளால் முன்வைக்கப்பட்டது. தன்னாட்சி என்பது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கொடையாக இல்லாமல் இந்தியர்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் பிரதிநிதிகளிடமிருந்து உருவாக வேண்டும் என்று காந்தியடிகள் தெரிவித்திருந்தார்.

இந்திய அரசாங்கச் சட்டம் 1935இன் அடிப்படையில் ஆகஸ்ட் 1946இல் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாகாண சட்ட மன்றங்கள் மத்திய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க அது அரசமைப்பு நிர்ணய சபையாக செயல்பட்டது. 1946இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது. வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. தேர்தல் முடிவுகள் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் முஸ்லிம் லீக் கட்சிக்கும் மற்ற இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் செல்வாக்கு இருந்ததை உணர்த்தின. முஸ்லிம் லீக் அரசமைப்பு உருவாக்கும் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்து தனி நாடு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. காங்கிரஸ் அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்றது.

மாகாண சட்டமன்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசமைப்பு நிர்ணய சபைக்கான காங்கிரஸ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் (224 இடங்கள்) ஆதிக்கம் செலுத்திய போதிலும் கம்யூனிஸ்டுகளும் சோஷியலிஸ்டுகளும் குறைந்த எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர். டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், பம்பாயிலிருந்து அரசமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுமாறு பார்த்துக் கொண்ட காங்கிரஸ் அவரை அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது. காங்கிரஸ் தலைமைதன் கட்சியின் வல்லுநர்களோடு புகழ்பெற்ற அரசமைப்பு வழக்கறிஞர்களையும் அரசமைப்பு நிர்ணய சபையில் இடம் பெறச் செய்தது.

இந்திய தேசிய காங்கிரசால் கராச்சி கூட்டத்தில் (மார்ச் 1931) நிறைவேற்றப்பட்ட அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் இடம் பெற்ற தன்னாட்சி என்பதன் பொருள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கியல் (idealism) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மேற்கண்டவாறு அரசமைப்பு நிர்ணய சபையை உருவாக்கியது. குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் நம்பிக்கையுடன் உறுதி செய்யும் ஓர் ஆவணமாக இந்திய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது. இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தையும் வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையையும் உறுதி செய்தது. மேலும், இந்திய அரசமைப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டம் இயற்றுவதில் இறையாண்மையை உறுதிபடுத்திய அதே அளவுக்கு நீதித்துறையின் சுதந்திரத் தன்மையையும் உறுதி செய்தது.

அரசமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் உலகின் பல்வேறு அரசமைப்புகளின் அம்சங்களைக் கற்றுக் கொள்வதிலும் அவற்றை இந்திய அரசமைப்பு உருவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதிலும் எவ்வித தயக்கமும் காட்டவில்லை . அதே சமயத்தில் இந்திய அரசமைப்பு உருவாக்கம் என்பது பிற உலக நாடுகளின் அரசமைப்புகளைப் பார்த்து அப்படியே எழுதிவிடும் பணி அல்ல என்பதிலும் தெளிவாக இருந்தனர்.

1946, டிசம்பர் 13 அன்று ஜவகர்லால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார். அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9இல் நடைபெற்றது. இராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானம் இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கானமிகச்சுருக்கமான அறிமுகமாக அமைந்தது. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை இந்திய அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். இந்திய அரசமைப்பு 1949 நவம்பர் 26இல் அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய அரசமைப்பு, இந்தியாவிற்கான ஒரு புதிய விடியலை உருவாக்கியதோடு இந்திய தொன்மையின் தொடர்ச்சியையும் நிறுவியது. அடிப்படை உரிமைகள் குறிக்கோள் தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன. அதேபோல், இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தில் (பாடம் – 5இல் குறிப்பிடப்பட்டுள்ளது) பட்டியலிடப்பட்ட உரிமைகளும், இதற்கு மூலங்களாய் அமைந்தன. இந்திய அரசமைப்பின் உ ணர்வு (The spirit of the Constitution) சுதந்திரப் போரின் அனுபவத்திலிருந்து பெறப்பட்டதாகும். அதே போல், அரசைமைப்பின் சட்டமொழி குறிக்கோள் தீர்மானத்திலிருந்தும் அதைவிட மிக முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10இல் வெளியிட்ட அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையிலிருந்தும் எடுக்கப்பட்டது.

சுதேச அரசுகளின் இணைப்பு

இந்திய அரசமைப்பு 1949 நவம்பர் 26இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்வைப் புதிதாய் பிறந்த தேசத்தின் துணிச்சலான புதிய பரிசோதனையின் தொடக்கம் எனலாம். இந்திய அரசமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோதே தேசமும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ள வேண்டிய புதிய சவால்களாக இருந்தன. அவற்றுள், இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.

சுதேசஅரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி 1947 ஆகஸ்ட் 15 க்குள் விரைவாக முடிக்கப்பட்டது. காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேசஅரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.

இந்தியாவின் ஏதேனும் ஒரு மாகாணத்தோடு சுதேசஅரசுகளை ஒருங்கிணைக்கும் பணி எளிதாகச் செய்துமுடிக்கப்பட்டது. டிசம்பர் 1945 மற்றும் ஏப்ரல் 1947 ஆகிய மாதங்களில் நடைபெற்ற அனைத்திந்திய மாநில மக்கள் மாநாட்டில், இந்திய அரசமைப்பு நிர்ணய சபையோடு இணைய மறுக்கும் மாநிலங்கள் இந்திய ஒன்றியத்தின் எதிரியாகக் கருதப்படும் என்ற அச்சுறுத்தலான அறிவிப்பே பல சுதேசஅரசுகள் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு இந்தியாவோடு இணைக்கப் போதுமானதாக இருந்தது. மேலும், இந்திய ஒன்றியத்தோடு இணையும் சுதேச மன்னர்களுக்குத் தாராளமாக மன்னர் மானியங்களும் (Privy Purse to the Princes) வழங்கப்பட்டன. சுதேசஅரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல் திறம்பட செய்து முடித்தார். சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்தோடு இணைப்பதற்கான உரிய அழுத்தத்தைக் கொடுத்ததில் மக்கள் இயக்கங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கியப் பங்கு வகித்த போராட்டங்களாக மூன்று போராட்டங்களைக் குறிப்பிடலாம். திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவான் ஆகிய சி.பி. இராமசாமியை எதிர்த்து நடத்தப்பட்ட புன்னப்புரா – வயலார் ஆயுதப் போராட்டம் முக்கியமானது. இன்னொரு முக்கியமான போராட்டம் பிரஜா மண்டல் மற்றும் ஒடிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சிகள் (நீலகிரி, தெங்கனால் மற்றும் தல்சர்) இந்தியாவில் நடந்த இரண்டாவது முக்கிய சுதேச எதிர்ப்புப் போராட்டம் ஆகும். மைசூர் மகாராஜாவிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டங்களும் இந்திய சுதேச அரசுகளின் இணைப்புக்கு முக்கியப் பங்காற்றின.

இணைப்புறுதி ஆவணம்: இந்திய அரசாங்கச் சட்டம் 1935 கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும். இந்த ஆவணமே பிரிவினையின்போது இந்திய சுதேச அரசர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுகைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவித்தார். ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். இதே போல், காஷ்மீரின் இந்து அரசரான மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்குமென்று அறிவித்த போது அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டுத் தலைமையில் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள்’ என்ற போராட்டத்தை அரசருக்கெதிராக தொடங்கினர். காஷ்மீரிலும் பிற சுதேசஅரசுகளிலும் தோன்றிய இயக்கங்கள் நிலப்பிரபுத்துவத்தின் நலிவு மற்றும் அங்கு நிலவிய சமூகஉறவுகளுக்கு எதிரானவையாகும்.

ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இரசாக்கர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தித் தெலங்கானா மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர் இதன் காரணமாக ஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டப்பூர்வமான காரணம் வாய்த்தது எனலாம்.

1946 முதலே படேல் காஷ்மீர் மகாராஜாவோடு பேச்சு வார்த்தை நடத்தி வந்த போதிலும், காஷ்மீர் அரசர் ஹரிசிங் இந்தியாவோடு இணைய மறுத்துவந்தார். எனினும், இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப்” பின் (அக்டோபர் 1947) பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடிய போது மகாராஜா ஹரிசிங்கால் அந்த நடவடிக்கையைத் தடுக்க முடியவில்லை . காஷ்மீர் அரசருக்கு உதவுவதற்காக, இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் படேல் உறுதியாக இருந்தார். இதன் விளைவாக, காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது. இந்த நிகழ்வின் போது தலைவர்கள் காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளும் காஷ்மீர் மக்கள் மீதான அக்கறையும் அரசமைப்பு நிர்ணய சபையை ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசமைப்பின் உறுப்பு 370இன் படி தனி அந்தஸ்து வழங்கக் காரணமாயின.

மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு

விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் உருவாக்கத்தில் முக்கியமான ஒரு அம்சம் மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைத்ததாகும். காலனிய ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை நிர்வாக அலகுகளாக அதாவது, இந்திய நிலப்பரப்பு மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத, நிர்வாக வசதிக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட மாகாணங்களாக விட்டுச் சென்றனர். விடுதலையும் அரசமைப்பு அடிப்படையிலான மக்களாட்சி கருத்தாக்கமும் மக்களை இறையாண்மை உள்ளவர்களாகவும் இந்தியாவை வெறும் நிர்வாகரீதியாக அணுகாமல், பன்முக கலாச்சாரம் கொண்ட தேசமாக, கூட்டாட்சித் தத்துவ அடிப்படையில் முழுமையாக அணுக வேண்டும் என்பதை வலுப்படுத்தின.

மொழிவாரி மாநில மறுசீரமைப்பு, இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் 1947 மற்றும் 1949 இடைப்பட்ட ஆண்டுகளில் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால், அரசமைப்பு நிர்ணய சபை இது குறித்த விவாதத்தை இரண்டு காரணங்களுக்காக நிலுவையில் வைத்தது. மொழிவாரி மாநில மறுசீரமைப்பானது பெரும்பணி என்பது முதற் காரணம், இந்தியப் பிரிவினையும் அது தொடர்பான வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மொழிவாரியான மாநிலம் குறித்து விவாதம் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இன்னொரு காரணம்.

இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபின் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கை படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 1956இல் ஆந்திரப்பிரதேச உருவாக்கத்தில் தொடங்கி 1966இல் பஞ்சாப் மாநிலத்தைப் பஞ்சாபி மொழி பேசும் பஞ்சாப் மாநிலம் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் என மூன்றாகப் பிரித்ததில் முற்றுப்பெற்றது.

1920ஆம் ஆண்டு முதலே இந்திய விடுதலை இயக்கத்தோடு, மொழிவாரி மாநிலக் கோரிக்கை ஒன்றிணைந்திருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் (1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மொழி வாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது.

1928இல் வெளியான நேரு அறிக்கை பிரிவு 86இல் பின்வருமாறு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறு சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்”

1945ஆம் ஆண்டு மாகாண மற்றும் மத்திய சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலின் போது இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மொழிவாரி மாகாணங்கள் பற்றிய கருத்து ஆணித்தரமாக இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் (இந்திய தேசத்திற்குள் வாழும்) ஒவ்வொரு குழுவின் சுதந்திரத்திற்கும் துணை நிற்பதோடு அந்த குழுக்களின் தனிப்பட்ட வாழ்வு, கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்த தேசத்திற்குள் மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் மாகாணங்களை அமைக்கவும் துணை செய்யும் என்று குறிப்பிட்டது.

அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்திற்குப்பின், 1946 ஆகஸ்ட் 31இல் பட்டாபி சீதாராமைய்யா ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன் வைத்தார். இந்த முழுப்பிரச்சனையை முதல் பிரச்சனையாகவும், முக்கியப் பிரச்சனையாகவும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை தீர்வு காண வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், 1946, டிசம்பர் 8இல் ஒரு மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கிய போது நிறைவேற்றிய தீர்மானத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கையை அரசமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசாங்கத்தின் அறிவிக்கை ஒன்று, புதிய அரசமைப்பில் சிந்து, ஒரிசா (ஒடிசா) மாகாணங்கள் போல ஆந்திராவும் தனி அலகாகக் குறிப்பிடப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி இந்திய அரசாங்கச் சட்டம் 1935-லும் அவ்வாறே இடம்பெற்றது.

ஆனால், அரசமைப்பு வரைவுக்குழு ஆந்திராவிற்கான புவியியல் மாகாண எல்லைகள் வகுக்கப்படும் வரை ஆந்திராவைத் தனி அலகாக குறிப்பிட முடியாது என்று கருதியது. எனவே, 1948, ஜுன் 17இல் அரசமைப்பு நிர்ணய சபைத் தலைவர் இராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் ஒன்றை அமைத்தார். மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் என்றழைக்கப்பட்ட அது புதிய மொழிவாரி மாகாணங்களாக ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து ஆராய்ந்தது. 1948 டிசம்பர் 10இல் இந்த ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மொழிவாரி மாகாண மறுசீரமைப்பு என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரான காரணங்களைப் பட்டியலிட்டது. முன்மொழியப்பட்ட நான்கு மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு எதிராக அந்த ஆணையம் கருத்துரைத்தது.

எனினும், மொழிவாரி மாகாணக் கோரிக்கை நின்றுவிடவில்லை. ஜெய்ப்பூர் மாநாட்டில் பட்டாபி சீதாராமையா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்தக் கோரிக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அதன் காரணமாக, மொழிவாரி மாகாணக் கோரிக்கையை ஆராய ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் கொண்ட ஜே. வி.பி. குழு (J.V.P. Committee) அமைக்கப்பட்டது.

ஜே.வி.பி. குழு தனது அறிக்கையை 1949 ஏப்ரல் 1இல் சமர்ப்பித்தது. துரதிருஷ்டவசமாக இந்தக் குழுவும் மொழிவாரி மாகாண ஆணையத்தின் முடிவையே ஆதரித்தது. இந்தக் குழு மொழிவாரி மாகாணங்கள் குறுகிய பிராந்தியவாதத்தை வலியுறுத்துகின்றன என்றும், அது நாட்டின் மேம்பாட்டிற்கு “அச்சுறுத்தலாக” உருவாகக்கூடும் என்றும் தெரிவித்தது. ஜே.வி.பி. குழு மொழியானது பிணைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு பிரிக்கும் ஆற்றலும் உடையது என்று குறிப்பிட்ட போதிலும், “நாட்டில் சாதகமான சூழ்நிலை உருவாகும் போது – மக்களின் சிந்தனைகள் அமைதிப்படும்போது, எல்லைகளை மாற்றி அமைத்து புதிய மாகாணங்களை உருவாக்கலாம் என்றும் அவ்வாறு உருவாக்குவது எளிதாகவும் அனைத்து அக்கறைகளுக்கும் நன்மை தருவதாகவும் அமையும் என்றும் வலியுறுத்தியது.

ஜே.வி.பி. குழு தனது அறிக்கையின் முடிவுரையில் மொழிவாரி மாநில மறுசீரமைப்பிற்கு அது உகந்த நேரமல்ல என்று தெரிவித்தது. வேறுவிதமாக சொல்வதானால், மொழிவாரி மாநிலம் மறுசீரமைப்பிற்கான ஒருமித்தக் கருத்தை உருவாக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை மறுசீரமைக்கவும் இருக்கின்ற மாநிலங்களிலிருந்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்குமான வழிவகைகளைத் திறந்து வைத்தது.

இந்திய அரசமைப்பை உருவாக்கியவர்கள் மாநில மறுசீரமைப்பு, மொழி அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று குறுக்காமல் மாநில மறுசீரமைப்பை ஒத்துக்கொள்ளக்கூடிய வேறு காரணங்கள் அடிப்படையிலும் அமைக்கலாம் என பரந்த பார்வை கொண்டிருந்தனர்.

முதல் பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மீண்டும் மொழிவாரி மாநில கருத்தாக்கம் எழுச்சிபெற்றது. ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 1952 அக்டோபர் 19இல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பர் 15 அன்று இரவு காலமானார்.

இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 (Article 3) பின்வருமாறு தெரிவிக்கிறது:

நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

(அ) ஒரு மாநிலத்திலிருந்து நிலப்பகுதியைப் பிரித்தோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை இணைத்தோ அல்லது ஏதேனும் நிலப்பகுதியை மாநிலப் பகுதிகளோடு இணைத்தோ புதிய மாநிலத்தை உருவாக்கலாம்;

(ஆ) எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் அதிகரிக்கலாம்;

(இ) எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் -குறைக்கலாம்;

(ஈ) எந்த மாநிலத்தின் –எல்லையையும் மாற்றியமைக்கலாம்;

இதன் காரணமாக பசல் அலியைத் தலைவராகவும், கே.எம்.பணிக்கர் மற்றும் எச்.என். குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபரில் சமர்ப்பித்தது. இந்த ஆணையம் பின்வரும்மாநிலங்களைக் கொண்டதே இந்திய யூனியன் என்று வரையறுத்தது. மதராஸ், கேரளம், கர்நாடகம், ஹைதராபாத், ஆந்திரம், பம்பாய், விதர்பா, மத்தியபிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா (ஒடிசா), ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவையாகும். வேறுவிதமாகச் சொல்வதெனில் ஆணையத்தின் பரிந்துரைகள் நிர்வாகக் காரணங்கள் மற்றும் மொழிவாரி மாகாண கோரிக்கைகள் ஆகியவற்றிற்கிடையேயான சமாதான நடவடிக்கைகளாக அமைந்தன.

நேரு ஆட்சிக்காலத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கை , மாநில மறுசீரமைப்புச் சட்டமாக 1956இல் நிறைவேற்றப்பட்டு உறுதியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஹைதராபாத்தை உள்ளடக்கிய ஆந்திரபிரதேசம் உருவானது. திருவாங்கூர், கொச்சின் அரசு மற்றும் மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி கேரளம் உருவானது. மைசூர் அரசு மற்றும் பம்பாய், மதராஸ் மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கி கர்நாடகம் உருவானது. இவை அனைத்திலும் மொழி அடையாளமே மையக் கருத்தாக அமைந்தது.

குஜராத்தி மொழி பேசும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மே 1960இல் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது. பஞ்சாபி சபாவால் முன்வைக்கப்பட்ட பஞ்சாப்மாநிலக் கோரிக்கை 1966 வரை பிரிவினை வாதமாகப் பார்க்கப்பட்டு வந்தாலும் 1966இல் பஞ்சாப் மாகாணம் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் என 3 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் 1920இல் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு முடிவுக்கு வந்தது.

இந்திய வெளியுறவுக் கொள்கை

சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படைக் கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன எனலாம். இந்தக் கோட்பாடு விடுதலைப் போராட்டத்தின் போது படிப்படியாக வளர்ச்சியுற்றது. காலனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிநாதமாகும். ஜவகர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான சிற்பி ஆவார்.

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு: காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல், வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை, ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை, பிறநாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல், பிற நாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல், நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படா வண்ண ம் இரு நாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், அமெரிக்கா (USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை மூலம் தீர்வு கண்டது.

அணிசேராக் கொள்கையின் விவரங்ளைப் பார்ப்பதற்கு முன், விடுதலைக்குப் பின் இந்தியா சீனாவோடு கொண்டிருந்த உறவு குறித்துப் பார்க்கலாம். இந்தியா விடுதலைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1949இல் சீனா ஜப்பானியக் காலனிய விரிவாக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. இந்தியா, சீனாவோடு நீண்ட எல்லையைக் கொண்டிருந்ததால் நேரு சீனாவுடனான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்.

சீன மக்கள் குடியரசை 1950 ஜனவரி 1இல் முதன் முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா காலனி ஆதிக்கத்தால் பெற்ற துன்பம், அதன் விளைவுகளான வறுமை மற்றும் பின்தங்கிய வளர்ச்சி ஆகிய அனுபவ ஒற்றுமைகளின் காரணமாக இந்தியாவும் சீனாவும் கைகோர்த்து உலகில் ஆசியாவிற்கோர் இடத்தை நிலைநிறுத்த முடியும் என்று நேரு கருதினார். ஐ.நா பாதுகாப்பு அவை கம்யூனிச சீனாவை உறுப்பினராக ஏற்க வேண்டுமென்று நேரு வலியுறுத்தினார். ஆனால், 1950இல் சீனா, திபெத்தை ஆக்கிரமித்த போது இந்தியா வருத்தமடைந்தது. இந்தியாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் சீனா நடந்துகொள்ளவில்லை என இந்தியா கருதியது. 1954இல் இந்தியா மற்றும் சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீதிருந்த உரிமையை அங்கீகரித்தது. அத்தோடு இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாகப் பஞ்சசீலக் கொள்கையை வகுத்தது.

பஞ்சசீலக் கொள்கை

1.இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.

2.இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.

3.ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.

4.இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.

5. சமாதான சகவாழ்வு

ஏப்ரல் 1955இல் நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில் சீனாவையும் அதன் தலைவரான சூ – யென் – லாயும் முன்னிலைப்படுத்த நேரு சிறப்பான முயற்சிகள் எடுத்தார். ஆனால், 1959இல் சீன அரசாங்கம் பெளத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியதால், பௌத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஆயிரக்கணக்கான அகதிகளுடன் திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்தியா, தலாய்லாமா -விற்கு தஞ்சம் வழங்கியது சீனாவை வருத்தமடையச் செய்தது. அதன் பின்னர், அக்டோபர் 1959இல் லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்தியப் படை மீது சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்தியக் காவலர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்; பலகட்ட அளவில் பேச்சுவார்த்தை (நேரு மற்றும் சூ-யென் – லாய் உட்பட) நடைபெற்றபோதிலும் இந்திய – சீன உறவில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.

1962இல் இந்திய சீனப் போர் ஏற்பட்டது. 1962, செப்டம்பர் 8இல் சீனப் படைகள் தக்லா மலைப் பகுதியில் தாக்குதல் நடத்தின. இதன் விளைவாக, இந்தியா சீனாவோடு இணைந்து ஆசிய மண்டலத்தை உருவாக்கும் கனவு தகர்ந்து போனது. இதனால், இந்திய சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கம், பங்களாதேஷ் போரில் சீனா மற்றும் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு போரிட்ட பாகிஸ்தானை தோற்கடித்த பின்பே துடைக்கப்பட்டு இந்தியாவின் சுய கௌரவம் நிலை நிறுத்தப்பட்டது.

உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இந்திய சீன உறவுமற்றும் பஞ்ச சீலக் கொள்கையுடன் மட்டும் நிறைவடையவில்லை . வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராத அணி சேராமை என்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது.

மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும். இத்தகைய மாநாடு மீண்டும் ஒரு முறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறு காலனியாக்கத்திற்கு உட்படுத்த விரும்பிய, டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது. காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954இல் கொழும்பில் நடைபெற்ற ஆசியத் தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இந்த முயற்சிகளின் முத்தாய்ப்பாகவே 1955இல் இந்தோனேசியா நாட்டின் பாண்டுங் நகரில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது.

சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பியான ஜவகர்லால் நேரு , எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ ஆகியோருடன் இணைந்து 1961இல் அணுசக்தி ஆயுதக்குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தார். அணிசேராமையின் முக்கியத்துவம் மற்றும் உலகத்துக்கு அதன் தேவை குறித்து நேரு பின்வருமாறு குறிப்பிட்டார்.

பாசிசம், காலனித்துவம், இனவாதம் அல்லது அணு குண்டு, ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை போன்ற அனைத்து தீய சக்திகளையும் பொறுத்தவரையில், நாம் மிகவும் உறுதியாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் அவற்றை எதிர்த்து நிற்கிறோம். பனிப்போர் மற்றும் அதுதொடர்பான இராணுவ ஒப்பந்தங்களிலிருந்து மட்டும் நாங்கள் விலகி நிற்கிறோம். ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் புதிய நாடுகளைத் தங்களது பனிப்போர் இயந்திரத்துக்குள் கட்டாயப்படுத்தித் தள்ளும் முயற்சிகளை எதிர்க்கிறோம். இல்லையெனில், நாம் தவறெனக் கருதும் அல்லது உலகத்துக்கோ , நமக்கோ தீங்கிழைக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் கண்டனம் செய்யலாம். அதற்கான, சந்தர்ப்பம் எழும்போதெல்லாம் நாம் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவோம்”

பாண்டுங் பேரறிக்கை

உலக அமைதியையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக ஐ.நா.சாசனத்தின் 10 அம்சக் கோட்பாடுகளை உள்ளடக்கிய “பேரறிக்கை:

1.அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை மதித்து நடத்தல்.

2.அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளித்தல்.

3.அனைத்து இனங்களின் சமத்துவத்தையும் பெரிய மற்றும் சிறிய அளவிலான அனைத்து நாடுகளின் சமத்துவத்தையும் அங்கீகரித்தல்.

4.மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையீடு அல்லது தலையீடுகளில் இருந்து விலகுதல்.

5.ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமையுண்டு. தனியாகவோ அல்லது கூட்டாகவோ, ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு ஏற்ற விதத்தில் பாதுகாத்துக் கொள்ளலாம்.

6.(அ) வல்லரசுகளின் எந்தவொரு குறிப்பிட்ட நலன்களுக்கும் சேவை செய்வதற்கு கூட்டாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்துவதில் இருந்து ஒதுங்கிக் கொள்ளல்.

(ஆ) எந்தவொரு நாடும் பிறநாடுகளின் மீது அழுத்தங்களைச் செலுத்தாமல் ஒதுங்கி இருத்தல்.

7.ஆக்கிரமிப்பு அல்லது ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் அல்லது எந்த ஒரு நாட்டின் நில ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுயநிர்ணயத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் விலகி இருத்தல்.

8.ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இணங்க அனைத்து சர்வதேச முரண்பாடுகளையும் சமாதான வழிவகைகள், சமரசம் , நடுவர் அல்லது நீதித்துறை தீர்வு போன்ற அமைதியான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ளுதல்.

9.பரஸ்பர நலன்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துதல்.

10. நீதி மற்றும் சர்வதேசக் கடமைகளை மதித்தல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *