× TNPSC Group 1 App Ad

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

அறிமுகம்

இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப்போருக்கு முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1905இல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது. 1908இல் இளம் துருக்கியர்களும் 1911இல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள். முதல் உலகப்போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.

சண்டைகள் பல பகுதிகளில் நடந்த போதிலும் இந்தப் போரின் முக்கியக் களமாக ஐரோப்பா விளங்கியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் ராணுவ சேவை புரிய பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களை ஆங்கிலேயர்கள் பணிக்கு எடுத்தனர். இந்தப் போருக்குப்பின் புதிய சிந்தனைகளுடன் இந்தியா திரும்பிய இந்த வீரர்கள் இந்திய சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினர். வற்புறுத்தலின் காரணமாக 367 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை இந்தியா, 229 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளில் நேரடி ரொக்கமாகவும் எஞ்சிய தொகையைப் போர்ச்செலவுகளைச் சமாளிக்க கடனாகவும் வழங்கியது. இதைத்தவிர 250மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப் பொருட்களையும் இந்தியா அனுப்பியது. இதனால் பெருமளவில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள், தீவிரத் தேசியவாதிகள் என இருவேறு வகைகளில் பிரிந்த காரணத்தாலும் போரின் போது பிரிட்டிஷாரின் நலன்களுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டதாலும் தேசிய அரசியல் தீவிரமற்று இருந்தது. 1916இல் திலகர் தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தினர். மேற்கத்திய இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தப் போரின் போது காங்கிரஸ் மீண்டும் ஒன்றுபட்டது. 1916இல் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது. இந்தப் போரின் போது தீவிர தேசியவாதிகளின் சிந்தனைகளை மேற்கத்தியப் புரட்சிகர கருத்துக்கள் பெருமளவில் ஆக்கிரமித்தன. எனவே அடக்குமுறைச் சட்டங்களை இயற்றியும் பயன்படுத்தியும் தேசிய இயக்கத்தை அடக்கியாள ஆங்கிலேய அரசுமுயன்றது. கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையானதாக ரௌலட் சட்டம் அமைந்தது. இந்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த இந்தியத் தலைவர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சர்வதேச நிகழ்வுகளும் குறிப்பாக ரஷ்யப் புரட்சி போன்ற நிகழ்வுகளும் இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும், அதன்பின் கையெழுத்தான செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை (கலிபா) நிலைதாழ்த்திக் காட்டியது. இதன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது.

இந்தியாவின் விசுவாசத்துக்குப் பிரிட்டன் உரிய மதிப்பளிக்கும் என்று நம்பி இந்தியாவும் இந்தியர்களும் இந்தப் போரில் தீவிரமாகச் செயல்பட்டனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவ்வாறாக இந்தியாவின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் பலதரப்பட்ட பாதிப்புகளை இந்தப் போர் உண்டாக்கியது. இந்தப் பாடத்தில் தன்னாட்சி இயக்கத்தின் பங்கு , லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான காரணிகள் மற்றும் அந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடிவடைந்த ஆங்கிலேயர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள், கிலாபத் இயக்கம், முறை சார்ந்த தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி ஆகியன குறித்து நாம் விவாதிக்கலாம்.

அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம்

A.O.ஹுயூம் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் நமது விடுதலைப் போரின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்கினை ஆற்றினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் இதேபோன்றதொரு முக்கியப் பணியை ஆற்றினார். அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசண்ட், பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார். பிரம்மஞான சபையின் (தியாசாபிகல்  சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசண்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893இல் வந்தார். பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை அவர் நிறுவினார். (பின்னர் இந்தக் கல்லூரி 1916ஆம் ஆண்டு பண்டித மதன் மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது). 1907இல் எச். எஸ் ஆல்காட் அவர்களின் மறைவுக்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக பெசண்ட் அம்மையார் பதவி வகித்தார். பிரம்மஞான சபையின் கொள்கைகளை அதன் தலைமையகமான சென்னையின் அடையாறில் இருந்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்த அவருக்குக் கல்விகற்ற பல தொண்டர்களின் ஆதரவும் கிடைத்தது. ஜம்னாதாஸ் துவாரகாதாஸ், ஜார்ஜ் அருண்டேல், ஷங்கர்லால்பன்கர், இந்துலால்யக்னிக், சி.பி. இராமசாமி, பி.பி. வாடியா ஆகியோர் பெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள்.

1914இல் பிரிட்டன் முதல் உலகப்போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்டது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காகத் தான் பாடுபடுவதாகவும் அது தெரிவித்தது. பிரிட்டனின் போர் முயற்சிகளை இந்தியத் தலைவர்கள் நம்பிக்கையுடன் ஆதரித்தனர். இந்தியா பற்றிய பிரிட்டிஷாரின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாததால் விரைவில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதத்தன்மை உடையவர்கள் என்ற குழுக்களாகப் பிளவுபட்டதால், தன்னாட்சிக்கான அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து மேலும் வலியுறுத்த முடியவில்லை . மைய நாடுகளை ஆதரித்து முதல் உலகப்போரில் துருக்கியின் சுல்தான் நுழைந்ததை அடுத்து பிரிட்டிஷார் முஸ்லீம் லீக்கை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர்.

இந்த பின்னணியில் தான் அன்னிபெசண்ட் அம்மையார் இந்திய அரசியலில் நுழைந்தார். 1914இல் தி காமன்வீல் என்ற வாரந்திரியை அவர் தொடங்கினார். சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்த வாராந்திரி கவனம் செலுத்தியது. 1915இல் “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார். கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் தொடக்கங்களை அவர் இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.

இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று அவர் முழக்கமிட்டார். சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்துமாறு இந்தியத் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட அவர் இந்திய விடுதலை குறித்து பல உரைகளை நிகழ்த்தினார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்டார். எனினும் அவரது பயணம் மூலம் இந்தியா குறித்த அனுதாபம் ஏற்பட்டது. இந்தியா திரும்பிய அவர், 1915 ஜூலை 14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கினார். பம்பாயில் நிகழ்த்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையை அவர் வெளிப்படுத்தினார். தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்.” ஆங்கிலேயக் காலனிகளைப் போன்று போருக்குப் பிறகு இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பரப்பவும் கோரிக்கையை வலியுறுத்தவும் அன்னிபெசண்ட் அம்மையார் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.

அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக அவர் 1915 செப்டம்பர் 28இல் முறைப்படி அறிவித்தார். மற்றொரு தனி இயக்கம் தொடங்கப்படுவதை மிதவாத தேசியவாதிகள் விரும்பவில்லை . தனது இயக்கம் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியின் அனுமதி தேவை என்பதை அவரும் அறிந்திருந்தார்.

திலகர், பெசண்ட் அம்மையார் ஆகியோரின் முயற்சிகளால் டிசம்பர் 1915இல் பம்பாயில் நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசியத் தன்மையுடையவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில் அக்கட்சி முறையாக திருத்தம் செய்தது. 1916 செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை கையிலெடுக்குமாறு அந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பெசண்ட் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யத்தவறினால், தாமே தன்னாட்சி இயக்கத்தை அமைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசண்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் : பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும் தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு குறிக்கோள்களாகும்.

(அ) திலகரின் தன்னாட்சி இயக்கம்

ஏப்ரல் 1916இல் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும். திலகரின் இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம், ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23இல் தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.

தன்னாட்சி: மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு , அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக இருப்பார்கள் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரத்தைக் குறிக்கிறது. பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் இது பொதுப்படையான அம்சமாக இருந்தது. 1880 களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோஅயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப்பெற்றது.

(ஆ) பெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம்

காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தால் செப்டம்பர் 1916ஆம் ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார். கான்பூர், அலகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை, அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன. இந்தியா முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு தன்னாட்சி குறித்த கருத்தை அவர் பரவச்செய்தார். இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை குறித்து அதிருப்தி அடைந்த மிதவாத தேசிய காங்கிரசார் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர். ஜவஹர்லால் நேரு , முகம்மது அலி ஜின்னா , பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டதிலிருந்து இந்த இயக்கத்தின் பிரபலத்தை அறிய முடியும்.

மதராஸில் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் மிகவும் பிரபலம் அடைந்ததை அடுத்து மதராஸ் அரசு அதனை அடக்க நினைத்தது . இந்த இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ள மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஜூன் 1917இல் பெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர். அரசின் இந்த அடக்குமுறை தன்னாட்சி கோரிய ஆதரவாளர்களை வலுப்படுத்தியது; மேலும் அதிக உறுதியுடன் போராடத் தூண்டியது. பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக சர். எஸ். சுப்ரமணியம் அரசப் பட்டத்தை (knighthood) துறந்தார். முன்னர் இந்த இயக்கத்தில் இருந்து தனித்து இருந்த மதன் மோகன் மாளவியா, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற தலைவர்கள் தங்களை தன்னாட்சி இயக்கத்தில் தீவிரமாக இணைத்துக்கொண்டனர்.

தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து 1917 ஜூலை 28இல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார். காந்தியடிகளின் உத்தரவின் பேரில் ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர்லால் பன்கர் ஆகியோர் பெசண்ட் மற்றும் இதர தலைவர்களை சிறைபிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்கி பெசண்ட் அம்மையார் சிறைபிடிக்கப்பட்ட இடத்துக்கு பேரணியாகச் சென்றனர். எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சிறைபிடிக்கப்பட்டத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு 1917 ஆகஸ்டு 20இல் அறிவித்தார். இந்த அறிக்கை ஒரே இரவில் பெசண்ட் அம்மையாரை விசுவாசிக்கு நிகராக மாற்றியது. செப்டம்பர் 1917இல் அவர் விடுதலையான போது அவர் 1917இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(இ) தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம்

காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்று திரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன. காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முதன் முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள். இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்தியடிகளின் போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர். அனைத்துவிதப் பிரிவுகளைத் தாண்டி காங்கிரஸ், முஸ்லிம் லீக், பிரம்மஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம் விளங்கியது.

(ஈ) தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி

‘Indian unrest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.

பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி பெறுவது அல்லது கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித் (டொமினியன்) தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காக இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1929இல் இந்திய லீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.

போரின் தாக்கம்

முதல் உலகப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது. மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெறும் நோக்கிலும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909இல் மிண்டோ – மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர். மிதவாத தேசியவாதிகள் பொறுத்திருந்து பார்ப்பது என்ற கொள்கையைப் பின்பற்றினர். தங்களுக்கு வழங்கப்பட்ட தனித் தொகுதிகளை முஸ்லிம் லீக் வரவேற்றது. 1913இல், இந்த லீக்கில் புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஏற்கனவே இருந்த முகமது அலி ஜின்னா , அவர்களில் முக்கியமானவர். அவர் முஸ்லிம்களுக்காக அதிக சீர்திருத்தங்களைக் கோரினார்.

இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல் உலகப்போர் உருவாக்கியது. போரில் பிரிட்டனின் சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர். கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்

முதல் உலகப்போர் விடுதலைப்போரில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. முதலில் பிரிட்டிஷ் அரசு இந்திய ஆதரவு பற்றிக் கவலைப்படவில்லை. மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா நோக்கி போர்ச்சூழல் நகர்ந்த பிறகு இந்திய ஆதரவை எதிர்பார்க்க பிரிட்டிஷார் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தச் சூழலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்குதல் தர இந்தியத் தலைவர்கள் முடிவு எடுத்தனர். 1915 இல் பம்பாயில் வருடாந்திர மாநாட்டை நடத்திக் கொண்டிருந்த காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் இதே அடிப்படையில் விவாதித்தன. அக்டோபர் 1916இல் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அரசப்பிரதி நிதிக்கு (வைசிராய்) எழுதிய கடிதத்தில் போருக்குப் பிந்தைய சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தினர். இதற்கு பிரிட்டிஷ் அரசு அசைந்துகொடுக்கவில்லை காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் சந்தித்து இந்த கடிதம் குறித்து விவாதித்தன. சட்டப்பேரவையின் கட்டமைப்பு, போருக்குப் பிந்தைய சூழலில் இரண்டு சமூகங்களுக்கும் அனுமதிக்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை ஆகியன குறித்து இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இதற்கு இணையாகத் திலகரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் தன்னாட்சி குறித்து அறிவுறுத்தினர். அவர்களது முயற்சிகளின் விளைவாகப் பம்பாய் மாநாட்டில் தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களைத் திரும்ப சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டு அதனைத்தொடர்ந்து காங்கிரசின் அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ், முஸ்லிம் லீக், தன்னாட்சி இயக்கம் ஆகியன தங்களுடைய வருட மாநாடுகளை லக்னோவில் நடத்தியதால் 1916ஆம் ஆண்டு முக்கியத்துவம் பெற்றது. காங்கிரஸ் தலைவர் அம்பிகா சரண் மஜும்தார் தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களை வரவேற்றார். பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்குப் பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து, சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் கடைசியில் சந்தித்துவிட்டனர்…” தீவிர தேசியத்தன்மை கொண்டவர்கள் திரும்பியதை அடுத்து காங்கிரஸ் தனது பழைய சக்தியைப் பெற்றுவிட்டது.

லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் – லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்-ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசண்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள். இந்த ஒப்பந்தத்தின் போது ஜின்னா குறிப்பிடத்தக்க பங்காற்றினார். நவம்பர் 1916இல் கல்கத்தாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் டிசம்பர் 1916இல் நடந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் வருடாந்திர மாநாடுகளில் உறுதி செய்யப்பட்டன.

சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவந்த லாலா ஹர்தயாள் 1913இல் நிறுவினார். இந்த அமைப்பு கதார் கட்சி என்று அழைக்கப்பட்டது. (உருது மொழியில் கதார் என்றால் கிளர்ச்சி என்று பொருள்). அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் இந்தக் கட்சியில் இடம்பெற்றிருந்தனர். ‘கதார்’ என்ற பத்திரிகையையும் இக்கட்சி வெளியிட்டது. 1913 நவம்பர் முதல் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது. பின்னர் உருது, பஞ்சாபி, இந்தி மற்றும் இதர மொழிகளிலும் அது வெளியானது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும். கோமகடமரு (Comagatamaru) என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறிவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது. இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலிசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.

லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள்

(i) நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.

(ii) மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

(iii) மாகாண மற்றும் மத்திய சட்டப்பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

(iv) மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.

(v) மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. (மக்கள்தொகையில் தெரிவிக்கப்பட்ட விகிதங்களுக்கு அப்பால்) இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து – முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.

(vi) தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.

(vii) இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும். ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சம நிலை பெற்றிருக்க வேண்டும்.

இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவை “இந்துமுஸ்லிம் ஒற்றுமையின் தூதர்” என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.

லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது. இந்த ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அதன் உச்சத்தை அடைந்தது.

காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்

காங்கிரசை ஒத்த தளத்தில் வன்முறையைக் கையில் எடுத்து ஆங்கிலேய ஆட்சியை அப்புறப்படுத்த முயற்சி செய்த புரட்சிகர குழுக்களும் உருவாகின. விடுதலைப் போரில் புரட்சிகர இயக்கங்கள் முக்கியப்பங்கு வகித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி வங்கப்பிரிவினையின் காலகட்டம் வரை அது முடுக்கத்தைப் பிடித்தது. முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கையை புரட்சிகர அமைப்புகளின் அங்கத்தினர்கள் எழுப்பினர். மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப் ஆகியன புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்தன. குறுகிய காலத்திலேயே சென்னை மாகாணமும் புரட்சிகர நடவடிக்கையின் ஒரு தீவிர களமாக இருந்தது.

வளர்ந்துவந்த தேசிய இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக 1903இல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார். பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் (1908), வெடிபொருட்கள் சட்டம் (1908), அதன்பிறகு இந்திய பத்திரிகைகள் சட்டம் (1910), தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் (1911) ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின் தொடர்பில் சில இந்திய தேசியவாதிகள் இருந்ததாக பிரிட்டிஷார் சந்தேகப்பட்டனர். வெளிநாட்டினரின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1914இல் இயற்றப்பட்டது. புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டங்கள் இயற்றப்பட்டன. கூட்டங்கள், தேசத்துரோக பிரசுரங்களைப் பிரச்சாரத்துக்காக அச்சிடுவது மற்றும் சுற்றுக்கு விடுவது ஆகியவற்றைத் தடுப்பது, சந்தேகத்துக்கிடமானவர்களைக் கைது செய்வது என காலனி ஆதிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915

முதல் உலகப்போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது. உள்ளூர் அரசு நியமித்த மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர் இந்தச் சட்டம் அனுமதித்தது. மீறுவோருக்கு இந்தச் சட்டத்தின் கீழ் வரும் விதிமுறைகளையும் உத்தரவுகளையும் மீறும் பட்சத்தில் மரண தண்டனை விதிப்பது; வாழ்நாள் முழுவதற்குமாய் நாடுகடத்துவது; பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது. வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றதால் முடிவுகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியில்லாதவையாகவும் இருந்தன. இந்தச் சட்டம் முதல் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போர் முடிவுற்றபின் இச்சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது.

கிலாபத் இயக்கம்

முதல் உலகப்போரில், நேசநாடுகளுக்கு எதிராக முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவைத் தாக்கினார். கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான் விளங்கினார். போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவுசெய்த பிரிட்டன் செவ்ரெஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. துருக்கியின் கிழக்குப்பகுதியில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலும் பாலஸ்தீனமும் ஜோர்டனும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் இடம்பெற்றன. கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர கூட்டணிப்படைகள் அவ்வாறு முடிவு செய்தன.

கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இசுலாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது அனுதாபம் கொண்டவர்கள் அதனால் இந்நடவடிக்கையை எதிர்க்க முடிவு செய்தனர். மௌலானா முகமது அலி, மௌலானா சௌஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். அவர்களின் தலைமையின் கீழ் இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் ஒன்றுபட்டனர். ஆட்டோமன் அரசை ஆதரிப்பதையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்த இயக்கம் தோன்றியது. மௌலானா அபுல் கலாம் ஆசாத், M.A. அன்சாரி, ஷேக் ஷெளகத் அலி சித்திக், சையது அதுல்லா ஷா புகாரி ஆகிய பல முஸ்லிம் தலைவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மார்ச் 1920இல் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்:

1. துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடரவேண்டும்.

2. இசுலாமியப் புனிதத் தலங்கள் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

3. சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்படவேண்டும்.

4. ஜாசிரத்-உல்- அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 1906இல் ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜுலு போர் வெள்ளிப்பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது. 1899-1900களில் போயர் போரின்போது தூக்கு படுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் தொடங்கிய போது, அனைத்துப் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதிபத்திய அரசு நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்துகொண்டதுடன், தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்கத் தவறுக்கு மேல் தவறு செய்தன. இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை.

இந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்றாலும் கலீபா பற்றிய கேள்வி மூலம் கிலாபத் இயக்கத் தலைவர்கள், பிரதேச , மொழி, வகுப்பு, பிரிவினைவாத வழிகளில் பிளவுபட்ட இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்க ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். கெயில் மினால்டின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், முழுமையான இந்திய இசுலாமிய அரசியல் மேம்பாட்டுக்கான வழியைத் திறக்க “முழுமையான இசுலாமிய அடையாளம் பயன்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் களம் காணவும், இந்திய தேசியம் என்ற தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைக்கும் காரணியாகவும் விளங்குவதால் இதற்கு ஆதரவு தெரிவிக்க காந்தியடிகளுக்கு ஊக்கம் கிடைத்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பலப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாகக் காந்தியடிகள் கருதினார்.

கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். இவ்வாறே மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.

தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி

இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள். இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முதலில் மிகப்பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர். பம்பாயின் சோரப்ஜி ஷபூர்ஜி, மற்றும் என்.எம். லோக்காண்டே , வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.

சுதேசி இயக்கத்தின் (1905) பின்னணியில் இந்தியத் தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்தன. போர்க் காலப் பொருட்களைத் தயாரித்த இந்திய தொழிற்சாலைகளுக்குப் பிரிட்டிஷார் போரின்போது ஊக்கம் தந்தனர். போர் தொடர்ந்து நடந்ததை அடுத்து அவர்களுக்கு அதிகப் பொருட்கள் தேவைப்பட்டன. அதனால் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். போர் முடிவுக்கு வந்தவுடன் பணியாளர்கள் வேலையின்றித் தவித்ததோடு உற்பத்தியும் குறைந்தது. போருக்குப் பிந்தையச் சூழலில் விலைகளும் தாறுமாறாய் அதிகரித்தன. உலகம் முழுவதும் பரவிய இன்ஃபுளுயன்சா (Influenza) தொற்றுநோயின் தாக்கத்தின் பிடியில் இந்தியாவும் சிக்கித் தவித்தது. தொழிலாளர்கள் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

1917ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. வகுப்புபேதம் பற்றிய விழிப்புணர்வும், அறிவார்ந்த சிந்தனையும் இந்தியத் தொழிலாளர்களின் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. ஐரோப்பாவில் போரில் பங்கேற்ற இந்தியப் படைவீரர்கள் அங்கிருந்த தொழிலாளர்களின் மேம்பட்ட நிலைமை பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தனர். போரால் ஏற்பட்டப் பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி, வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோருக்கிடையேயான பெரிய இடைவெளி, பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது, ஆகியன தொழிலாளர்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்தியாவில் தொழிலாளர் இயக்க வரலாற்றில் மதராஸ் முக்கியப் பங்காற்றியது. 1918இல் முதன்முறையாக அமைக்கப்பட்டத் தொழிற்சங்கமாக பி.பி. வாடியா அவர்களால் மதராஸ் தொழில் சங்கம் நிறுவப்பட்டது. பக்கிங்ஹாம், பெரம்பூர் கர்நாடிக் மில் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்தத் தொழிற்சங்கம் முக்கியமாக ஏற்பட்டது. அங்கு பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது. மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி, தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்தியத் தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகியன இந்தத் தொழிற்சங்கம் அமையக் காரணமாக அமைந்தன. ஒட்டுமொத்தமாக பேரம் பேசுவதைப் பின்பற்றி வகுப்புப் போராட்டத்துக்குத் தொழிற்சங்கம் சார்ந்த கொள்கைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தத் தொழிற்சங்கம் முனைந்தது.

இந்த அலை இந்தியாவின் இதரப் பகுதிகளுக்கும் பரவியது. இந்த காலகட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. கல்கத்தா மற்றும் பம்பாயில் இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம், பஞ்சாப் பத்திரிகை ஊழியர்கள் சங்கம், G.I.P. ரயில்வே பணியாளர்கள் சங்கம் பம்பாய், M.S.M. ரயில்வே ஊழியர் சங்கம், அஞ்சல் பணியாளர்கள் சங்கம், பம்பாயிலும் கல்கத்தாவிலும் துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம் ஜாம்ஷெட்பூர் தொழிலாளர் சங்கம், ஜாரியாவில் இந்திய நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு ரயில்வேக்களின் ஊழியர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் இயக்கத்தை அடக்கும் நோக்கில், பணமுதலாளிகளின் உதவியோடு அரசு தொழிலாளர்களைக் கீழ் நிலையில் வைத்திருக்க அனைத்து வழிகளிலும் முயன்றது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்வது, அவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியதோடு தொழிற்சங்கங்களுக்கு அபராதங்களையும் விதித்தனர். ஆனால் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருந்தனர்.

பணியாளர்களின் நிலைமை கண்டு இரக்கம் கொண்ட தேசியவாதத் தலைவர்களும் அறிவுஜீவிகளும் அவர்களைத் தொழிற்சங்கங்கள் மூலமாகச் செயல்பட வைக்க தீவிரம் காட்டினர். பணியாளர் வகுப்பின் அரசியல் வாழ்க்கைக்கு இவர்களது ஈடுபாடும் ஒரு காரணமாக அமைந்தது. பெரும்பான்மையான ஆலைகளின் உரிமையாளர்களாக ஐரோப்பியர்கள் இருந்ததால் அரசு அவர்களை ஆதரித்தது. அதன் காரணமாகவும் சுதந்திரப் போராட்டத்துக்கு வலு சேர்ந்தது.

1920 அக்டோபர் 30இல் 1,40,854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை (AITUC) நிறுவினர். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு , சி ஆர் தாஸ், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் பலர் இந்த அமைப்பை ஆதரித்தனர்.

தொழிற்சங்கங்கள் மெதுவாக தேசிய இயக்கத்தில் ஈடுபட்டன. ஏப்ரல் 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் காந்தியடிகளின் கைதுக்குப் பிறகு அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் வகுப்பினர் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசு அல்லது முதலாளிகளால் முதலில் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் இயக்கத்தின் வலிமை காரணமாக அரசும் முதலாளிகளும் அவர்களை அங்கீகரிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன. 1919-20இல் 107 ஆக இருந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1946-47இல் 1833 ஆக அதிகரித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Price: ₹1,020.00

Buy Now Product Image

Based on School New Text Books

Price: ₹1,045.00

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Price: ₹1,068.00

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Price: ₹266.00

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Price: ₹246.00

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Price: ₹1,090.00

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Price: ₹800.00

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Price: ₹590.00

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

Price: ₹800.00